சுவாதி நட்சத்திரம் – suvathi natchaththiram

சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் உடையவராக இருப்பார்கள். நல்ல அறிவுள்ள திறமைசாலிகளாகவும், நற்குணங்கள் நிரம்பியராகவும் இருப்பார்கள். நற்குணங்கள் நிரம்பியவர் என்பதால் அனைவருடன் சுமூகமாக பழகுவார்கள். சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் தன் வசம் எளிதாக ஈர்த்துக் கொள்ளும் திறன் உள்ளவர்கள். இவர்கள் மற்றவர்களிடமிருந்து எப்போதும் தனித்து காணப்படுவார்கள். திடமான புத்தி இருந்தாலும் கூட அடிக்கடி தன் புத்தியை மாற்றிக் கொள்ளும் குணம் படைத்தவர்கள். இவர்களது தோற்றமே மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். சுயமரியாதையை எப்போதும் இழக்கமாட்டார்கள். எவர் என்ன சொன்னாலும் சரி தனக்கு எது சரியென்று படுகிறதோ அதையே செய்வார்கள். அதில் தவறுகள் ஏதாவது ஏற்பட்டாலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டார்கள். பெரியவர் முதல் சிறியவர் வரை பாகுபாடின்றி பழகும் குணம் உள்ளவர்கள். நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உடையவர்களாக இருப்பார்கள். எந்த காரியமானாலும் அதில் எப்போதும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள்.


கல்வி

சகல விஷயங்களைப் பற்றியும் அறிந்திருந்தாலும் கூட கற்றது கைம்மண் அளவு என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். சகல சாஸ்திரங்களையும் அறிந்து வைத்திருப்பார்கள். சங்கீதம், நாட்டியம், இலக்கியம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

தொழில்

நல்ல மனவலிமையைப் பெற்றிருப்பதால் தொழிலில் ஏதேனும் இடர்பாடுகள் வந்தாலும் கூட அதை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பார்கள். மொத்த வியாபாரிகளாகவும், மார்க்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். முதலாளி – தொழிலாளி என்ற பாகுபாடில்லாமல் எல்லோரையும் சரிசமமாக நடத்துவார்கள். சிலர் கலைத்துறையை சார்ந்தவர்களாகவும், பேராசிரியர்களாகவும், கெமிக்கல் இஞ்சினியர்களாகவும், ஏரோனாட்டிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

குடும்பம்

இவர்களுக்கு மணவாழ்க்கை சற்று தாமதமாகத்தான் அமையும். எது நல்லது எது கெட்டது என ஆராய்ந்து செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களிடம் மதிப்பும், மரியாதை கொண்டவர்கள். பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கி தேவையானவற்றை சிறப்பாக செய்து கொடுப்பார்கள். முன்கோபம் அதிகமுள்ளவர்கள் என்பதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்தால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஆரோக்கியம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோல் நோய், ஹார்ட் அட்டாக், சிறுநீர்க் குழாய்களில் பாதிப்பு, கர்ப்பப்பை பாதிப்புகள் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திர குணங்கள்
சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் இடம்பெறுகிறது. ராகு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக வருவது சுவாதி நட்சத்திரம். இது மிகவும் பிரகாசமான நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தி பிறந்தவர்கள் அன்பும், இரக்கமும் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை சுண்டியிழுக்கும் வசீகரத்தையும், அழகையும் பெற்றவர்கள். பல துறைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.

பொதுவான குணங்கள்

தெய்வ நம்பிக்கைமிக்கவர்கள். தெய்வத்தின் அனுக்கிரகமும் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். ஒழுக்கம் தவறாதவர்கள். அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். எந்த காரியத்திலும் வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள். எதிலும் ஒரு தனித்தன்மை இவர்களிடம் வெளிப்படும்.

நீதியையும், நேர்மையையும் கடைப்பிடிப்பவர்கள். அதை மற்றவர்களுக்கு போதிப்பவர்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நல்லது கெட்டது எது என ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். எந்த சூழலிலும் மன உறுதியை இழக்கமாட்டார்கள். தன்மானச் சிங்கங்களாக இருப்பார்கள்.

குடும்பத்தினரிடம் அன்போடு நடந்து கொள்வார்கள். குழந்தைகள் என்றால் இவர்களுக்கு கொள்ளைப் பிரியம். பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் கூட அன்பு பாராட்டுவார்கள். பெரியோர்களை மதித்து நடப்பார்கள். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக அயராது பாடுபடுவார்கள். நல்ல சுவையான உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். தங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட அனுமதிக்கமாட்டார்கள்.

சுவாதி ஒன்றாம் பாதம்
முதல் பாதத்தை ஆட்சி செய்கிறவர் குரு பகவான். மன உறுதியையும், துணிச்சலையும் கொண்டவர்கள். புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். நிறைய படிப்பார்கள். பல பட்டங்களைப் பெறுவார்கள். எப்போதும் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள். கர்வமில்லாமல் தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். எளிமை விரும்பிகள். ஆன்மீக அதிக ஈடுபாடு உள்ளவர்கள். விவாதங்களில் வெளுத்து வாங்குவார்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள். தன்மானமிக்கவர்கள்.

சுவாதி இரண்டாம் பாதம்
இதன் அதிபதி சனி பகவான். நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள். பாகுபாடில்லாமல் பழகுவார்கள். தனித்தன்மையோடு விளங்குவார்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். எந்த காரியத்தையும் தெய்வ அனுக்கிரகம் வேண்டி தொடங்குவர். வெற்றியும் பெறுவார்கள். மனசாட்சிக்கு பயந்தவர்கள். தாய் தந்தையரை கடைசி வரை பாதுகாத்துப் போற்றுவார்கள். எதிரிகளை சுலபமாக அடையாளம் கண்டுவிடுவார்கள். தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் படைத்தவர்கள். உடன் பிறந்தவர்களிடம் அன்பும், அனுசரணையும் கொண்டவர்கள்.

சுவாதி மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்பவரும் சனி பகவான் தான். குடும்பப் பற்றுள்ளவர்கள். மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தானும் தன் குடும்பமும் நேர்மையாக நடந்து கொண்டால் போதும் என நினைப்பவர்கள். பேச்சாற்றல்மிக்கவர்கள். அடிக்கடி வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட்டு வாழ்க்கை தரம் உயரும். ஒருவர் செய்த உதவிக்கு மாற்று உதவியை எப்படியாவது செய்துவிட வேண்டும் என எண்ணுபவர்கள். எதிலும் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும். நல்ல நிலைக்கு வந்தவுடன் தான் திருமணம் என்பதில் திடமாக இருப்பவர்கள்.

சுவாதி நான்காம் பாதம்
நான்காம் பாதத்தை ஆட்சி செய்பவர் குரு பகவான். தாய்ப்பாசம் அதிகம் உள்ளவர்கள். பிறரிடம் அதிக உரிமைகள் எடுத்துக் கொள்வார்கள். யார் என்ன சொன்னாலும் தான் சொன்னது தான் சரி என்ற பிடிவாத குணம் கொண்டவர்கள். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்கள். குடும்ப முன்னேற்றத்துக்காக அயராது பாடுபடுவார்கள். தன்னை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லையே என அடிக்கடி ஆதங்கப்படுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் உழைக்கமாலே உயர்வு வேண்டும் என எண்ணுபவர்களாக இருப்பார்கள். அதிக ஆன்மீக பயணங்களை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்


சென்னை, வயலாநல்லூர் போஸ்ட், பட்டாபிராம் வழி, திருமணம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது அருள்மிகு தாத்தீரிஸ்வரர் (சித்துக்காடு) திருக்கோயில். தாயார் பூங்குழலி. சுவாதி நட்சத்திரக்கார்கள் தங்களது தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், இதய நோயால் அவதிப்படுவோர் இங்கு வந்து சிவபெருமானை வணங்கி வழிபடுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *