விசாகம் நட்சத்திரம் – visakam natchaththiram

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றத்தையும், கண்களையும் உடையவர்கள். சிறிது முன்கோபம் இருந்தாலும் கூட, நற்குணங்கள் நிறைந்தவராகவும், அறிவுக்கூர்மைமிக்கவராகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் தான, தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் சரி சமமாக பாவித்து நடத்துவார்கள். நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். எத்தகைய சூழலிலும் தான் கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் மாறமாட்டார்கள். சிறிது பொறாமை குணமும் இருக்கும். பெரியவர்களுக்கு மரியாதை அளிப்பார்கள். சமூகத்தில் பல பெரிய மனிதர்களின் தொடர்பால் பெயர், புகழ் அடைவார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் பொய் என்பது இவர்களிடம் அறவே இருக்காது. யாருக்காவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் சென்று உதவும் குணம் படைத்தவர்கள். சொந்த தொழில் செய்வதை விட பெரிய நிறுவனங்களில் பணிபுரிவதையே விரும்புவார்கள். சேமிக்கும் பழக்கம் இருப்பதால் பெரியளவில் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க மாட்டார்கள். கடினமாக உடலை வருத்தி உழைப்பதைவிட புத்தியைக் கொண்டு சமார்த்தியமாக காரியம் ஆற்றுவார்கள். எல்லோரிடமும் நட்பு பாராட்டுவதால் இவர்களது நண்பர்கள் வட்டம் பெரியதாக இருக்கும். எந்த ஒரு செயலையும் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள்.

கல்வி

கல்வியில் மிகப்பெரிய கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். உயர் கல்வியை கற்பார்கள். அனைத்து கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

தொழில்

இவர்கள் சிறந்த கல்விமானாக இருப்பதால் மனநல மருத்துவர், கோயில் அறநிலையத்துறையில் பணிபுரிவராகவும், வங்கி, ரேஸ், பெரிய நிறுவனங்களில் வர்த்தக பிரதிநிதியாகவும் விளங்குவார்கள். நீதித்துறை, அரசியல், கல்லூரி பேராசிரியர், அரசு துறைகளிலும் பணியாற்றுவார்கள். கலை, கணிதம் போன்றவற்றிலும் ஆர்வம் உள்ளவர்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிப்பவர்களாக இருப்பார்கள். பேஷன் டிசைனிங், மாடலிங், மேடைப் பேச்சாளர், ரேடியோ, டிவி, ராணுவம், நடனம், ஆடை வடிவமைப்பு, பாதுகாப்பு படை போன்றவற்றிலும் ஜொலிக்கக் கூடியவர்கள்.

குடும்பம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாகத்தான் நடைபெறும். மனைவி, மக்கள் மீது அதிக பாசம் காட்டுவார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே விரும்புவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வார்கள். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்களிடம் சண்டையிடும் நிலையும் ஏற்படலாம். சிறிது கஞ்சனாகவும், பக்திமானாகவும் இருப்பார்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும், தீயவர்களுக்கு தீயவராகவும் நடந்து கொள்வார்கள்.

ஆரோக்கியம்

உடல் நலத்தைப் பேணுவதில் அக்கறை கொள்ளமாட்டார்கள். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். பலமற்ற இருதயத்தைக் கொண்டவர் என்பதால் இருதய நோய்களும், சிறுநீரக நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

விசாகம் நட்சத்திர குணங்கள்
குரு பகவானின் இரண்டாவது நட்சத்திரம் விசாகம். தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் தான். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், 4ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். முன் கோபிகள். நியாயத்திற்கு குரல் கொடுப்பவர்களாகத் திகழ்வார்கள். தான தர்மங்கள் செய்வதில் அக்கறை காட்டுவார்கள்.

பொதுவான குணங்கள்

தெய்வ பக்தி நிறைந்தவர்கள். வீரம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். வசீகரமான முகத்தையும், உடலமைப்பையும், சிவந்த கண்களையும் பெற்றவர்கள். தாராள குணம் கொண்டவர்கள். தனக்கென்று கட்டுப்பாடுகள் விதித்து வாழ்பவர்கள். தான் கொண்ட கொள்கையை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். முடிவெடுப்பதில் வல்லவர்கள்.

சட்டம், சமூக நீதி, விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் என சகலத்தையும் அறிந்திருந்தாலும் கூட வெகுளியாக இருப்பார்கள். உண்மையையும் நியாத்தையும் மட்டுமே பேசுவார்கள். பொய் பேச மாட்டார்கள். பெரியோர்களை மதித்து நடப்பார்கள். பெருமையும், புகழோடும் வாழ்வார்கள். தொழிலிலும், வியாபாரத்திலும் அடிக்கடி நஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழல் வரும். கலை, கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

வெளியூர், வெளிநாடு பயணங்களை அதிகம் மேற்கொள்வார்கள். பெற்றோர்களை நேசிப்பவர்கள். குடும்பத்திற்காக எத்தகைய தியாகத்தை செய்யத் தயாராக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. சகல கலைகளையும் கற்று திறமைசாலிகளாக விளங்குவார்கள்.

விமானம் தொடர்பான கல்வி பயில்வார்கள். கப்பல், சட்டம், வங்கி ஆகிய துறைகளில் பணிபுரிவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட மாட்டார்கள். அதன் காரணமாக அடிக்கடி நோய்வாய்பட வேண்டியதிருக்கும். வாழ்க்கையின் முற்பகுதியை பிற்பகுதி தான் இவர்களுக்கு சிறப்பாக அமையும்.

விசாகம் முதல் பாதம்
இதன் அதிபதி செவ்வாய். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக இருப்பார்கள். முன் கோபிகளாக இருப்பார்கள். எதிலும் சட்டென்று உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பர். பிறரை நம்பமாட்டார்கள். தனது வேலைகளைத் தானே தான் செய்வார்கள். வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த வியாபாரியாகத் திகழ்வார்கள்.

விசாகம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை சுக்கிரன் ஆள்கிறார். சுயநலவாதிகள். தற்புகழ்ச்சிக்கு மயங்குகின்றவர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கையை ரசித்து வாழக் கூடியவர்கள். நல்ல சிந்தனையாளர்களாகவும், கலையில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மாயஜால வித்தைகளை அறிந்து வைத்திருப்பார்கள்.

விசாகம் மூன்றாம் பாதம்
இதன் அதிபதி புதன். கணிதம், விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். உடல் வலிமை கொண்டவர்கள். புகழுடன் வாழ்வார்கள். மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். எதிலும் திட்டமிட்டு வாழக்கூடியவர்கள். உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள்.

விசாகம் நான்காம் பாதம்
நான்காம் பாதத்தை ஆட்சி செய்கிறார் சந்திரன். இதில் பிறந்தவர்கள் செல்வம் சேர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். தாராள குணம் கொண்டவர்கள். குடும்பத்தின் மீது பற்றுள்ளவர்கள். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்கள். பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள். புகழை விரும்புகிறவர்கள்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை, பண்பொழியில் அமைந்துள்ளது அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில். விசாக நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். பக்தர்கள் வேண்டியதை எல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக இத்தல இறைவன் அமைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *