முகுந்தமாலா மந்திரம் – Mukunda mala mantra

முகுந்த மாலா முன்னுரை

  ஶ்ரீ  முகுந்த மாலா என்னும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ குலசேகர மன்னரால் இயற்றப்பட்டது என்று ராஜ்ஞா க்ருதா க்ருத்தியம் குலசேகரேண என்னும் இந்த ஸ்லோகத்தில் இறுதி ஸ்லோக  வரியில் தெரிகிறது.

 இந்த குலசேகர மன்னர் யார்? ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரும் குலசேகரப்பட்டினத்தை ஆண்ட மன்னரும் ஆவார். குலசேகராழ்வார் ஊர் திருவஞ்சைக்களம், பிறந்த நாள் மாசித் திங்கள் புனர்பூசம், கௌத்துவ மணியின் அவதாரம் என்பர். இவர் அரசு குலத்தைச் சேர்ந்தவர் அரியணை துறந்து திருமாலின் தொண்டரானார் . இராமன் மீது தீவிமான பக்தர் இவர் . இவர் தமிழ் மொழியோடு வடமொழியிலும் நல்ல தேர்ச்சியுடையவர். இவர் தமிழில் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்த மாலையும் பாடியுள்ளார். திருவேங்கடத்தில் பறவையாக , மீனா , மானாகப் பிறக்க வேண்டும் என இறைவனை பாடுகின்றார். இன்னும் பக்தர்கள் நடந்து ஏறிச் செல்ல உதவும் படியாகக் கிடக்கவும் வரம் வேண்டினார். இன்றும் அங்குள்ள படிகள் குலசேகரன் படி என்று அழைக்கப்படுகின்றது. இவரது பாடல்கள் ஒப்பற்ற உணர்ச்சிப் பிழம்பாக இருப்பதைக் காணலாம். திருவரங்கத்தில் மூன்றாம் மதிலை இவர் கட்டியதாகக் கூறுவர். இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு. 

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் வணக்கம்

குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா திநே திநே |
தமஹம் ஶிரஸா வந்தே ராஜாநம் குலஶேகரம் ||

விளக்கம்:  

எவருடைய பட்டணத்தில் தினந்தோறும் ஸ்ரீரங்க யாத்திரையானது பறைசாற்றப்படுகிறதோ அந்த குலசேகரர் என்னும் அரசரை நான் தலையால் வணங்குகிறேன்.

முகுந்த மாலா 1

ஶ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதிபக்தப்ரியேதி பவலுண்டனகோவிதேதி |நாதேதி நாகஶயனேதி ஜகன்னிவாஸேத்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த || 1 ||

விளக்கம்:

என்னுடைய முகுந்தனே! லஷ்மீபதியே! என்றும் வரமளிப்பவனே! என்றும் கருணையிற் சிறந்தவனே! என்றும் பக்தர்களின் அன்பனே! என்றும் பிறவித் தொடரை அறுப்பதில் வல்லவனே! என்றும் காப்பவனே! என்றும் பாம்பணைத் துயிலுடையானே! என்றும் உலகில் எங்கும் பரந்துளனே! என்றும் அடிக்கடி பேசுபவனாக என்னை செய்வாயாக.

முகுந்த மாலா 2

ஜயது ஜயது தேவோ தேவகீநந்தனோ(s)யம்ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஶ-ப்ரதீப꞉ |ஜயது ஜயது மேகஶ்யாமல꞉ கோமளாங்கோ꞉ஜயது ஜயது ப்ருத்வீ-பாரநாஶோ முகுந்த꞉ || 2 ||

விளக்கம்:

இந்த தேவகியின் மைந்தனான தேவன் வெற்றி கொள்வானாக. வ்ருஷ்ணிகுல விளக்கான கிருஷ்ணன் வெற்றி கொள்வானாக. மேகம்போல் கருத்தவனும் மெத்தென்ற உடல் படைத்தவனும் வெற்றி கொள்வானாக. பூமியின் பாரம் நீக்கிய முகுந்தன் வெற்றி கொள்வானாக.

முகுந்த மாலா 3

முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசேபவந்த-மேகாந்த-மியந்த-மர்த்தம் |அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தேபவே பவே மே(s)ஸ்து பவத்-ப்ரஸாதாத் || 3 ||

விளக்கம்:

ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி, இந்த ஒரே ஒரு பொருளை மட்டுமே உன்னிடம் யாசிக்கிறேன் அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய அருளால் உன் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.

முகுந்த மாலா 4

நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த்வ-மத்வந்த்வ-ஹேதோ꞉கும்பீபாகம் குருமபி ஹரே! நாரகம் நாபநேதும் |ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்பாவே பாவே ஹ்ருதய-பவநே பாவயேயம் பவந்தம் || 4 ||

விளக்கம்:

ஹே ஹரே! உன் இரு திருவடிகளையும் முக்திக்காகவோ கொடியதான கும்பீபாகம் என்னும் நரகத்தை நீக்கவோ, அல்லது சொர்க்க லோகத்தில் இருக்கும் நந்தவனத்தில் மெத்தென்ற கொடி போன்ற பெண்கள் நிறைந்திருக்கும் அந்த நந்தவனத்தில் வாழும் சுகத்திற்காகவோ நான் வணங்கவில்லை. என் இதயமாகிய கோயிலில் ஒவ்வொரு பிறவியிலும் உன்னை நினைக்கவேண்டும் என்பதற்காகவே உன்னை நான் வணங்குகிறேன்.

முகுந்த மாலா 5

நாஸ்தா தர்மே ந வஸுநிசயே நைவ காமோப-போகேயத்யத் பவ்யம் பவது பகவந்! பூர்வகர்மாநுரூபம் |ஏதத் ப்ரார்த்யம் மம பஹுமதம் ஜந்மஜந்மாந்தரே(s)பித்வத்-பாதாம்போருஹ-யுககதா நிஶ்சலா பக்திரஸ்து || 5 ||

விளக்கம்:

ஓ பகவானே எனக்கு தர்மத்தின் மீது விருப்பமில்லை, பணக்குவியல் மீதும் விருப்பமில்லை, காமத்தை அனுபவிப்பதிலும் விருப்பம் இல்லை, முன் வினைக்கு ஏற்றபடி எது எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படியே நடக்கட்டும். இப்பிறவியிலும் மறுபிறவியிலும் மிகவும் விருப்பமான கோரிக்கை இதுதான் உன் திருவடித் தாமரையை பற்றியதான அசையாத பக்தியானது இருக்கவேண்டும்.

முகுந்த மாலா 6

திவி வா புவி வா மமாஸ்து வாஸோநரகே வா நரகாந்தக! ப்ரகாமம் |அவதீரித-ஶாரதாரவிந்தௌசரணௌ தே மரணே(s)பி சிந்தயாமி || 6 ||

விளக்கம்:

நரகாசுரன் என்னும் அசுரனை அழித்தவனே! என்னுடைய வாசமானது சொர்க்கத்திலோ, பூவுலகிலோ, அல்லது நரகத்திலோ எங்ககிலும் இருக்கட்டும். ஆனால், என்னுடைய மரண சமயத்திலும் சரத் காலத்தில் பூக்கின்ற தாமரை மலர்களைப் பழிக்கும் அளவிற்க்கு அழகு நிறைந்த உன் இரு திருவடிகளையே சிந்தனை செய்கிறேன்.

முகுந்த மாலா 7

க்ருஷ்ண! த்வதீய-பதபங்கஜ-பஞ்ஜராந்த-மத்யைவ மே விஶது மாநஸ-ராஜஹம்ஸ꞉ |ப்ராண-ப்ரயாண-ஸமயே கபவாத-பித்தை꞉கண்டா-வரோதந-விதௌ ஸ்மரணம் குதஸ் தே || 7 ||

விளக்கம்:

ஓ கிருஷ்ணா! உன்னுடைய திருவடித் தாமரைகளாகிய கூட்டினுள் என்னுடைய மனமாகிய ராஜஹம்ஸம் இன்றே நுழையட்டும் உயிர் நீங்கும் சமயத்தில் கபம், வாதம், பித்தம் முதலியவற்றால் நெஞ்சை அடைக்கும் போது உன்னை எப்படி நான் நினைக்க முடியும்?

முகுந்த மாலா 8

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்மந்தமந்த-ஹஸிதாநநாம்புஜம்நந்தகோப-தநயம் பராத்பரம்நாரதாதி-முனிப்ருந்த-வந்திதம் || 8 ||

விளக்கம்:

நான் எப்பொழுதும் புன்முறுவல் பூக்கும் திருமுகத் தாமரையை யுடையவனும் நந்த கோபரின் திருமகனும் எல்லோரிலும் உயர்ந்தவனும் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படடவனுமான ஸ்ரீ மஹா விஷ்ணுவையே எப்பொழுதும் சமரிக்கிறேன்.

முகுந்த மாலா 9

கரசரண-ஸரோஜே காந்திமந்நேத்ரமீநேஶ்ரமமுஷி புஜவீசி-வ்யாகுலே(s)காதமார்கே |ஹரிஸரஸி விகாஹ்யாபீய தேஜோஜலௌகம்பவமரு-பரிகிந்ந꞉ கேதமத்ய த்யஜாமி || 9 ||

விளக்கம்:

ஹரி என்பதே ஒரு தடாகம் இந்த தடாகத்தில் பகவானுடைய கைகால்களே தாமரை மலர்கள்; அவரது கண்களே மீன்கள்; அவரது புயங்களே அசையும் அலைகள்; பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸாரமாகிய பாலைவனத்தில் சுற்றி அலைந்து நான், இத்தடாகத்தில் மூழ்கி இறைவனது திருமேனி ஒளியாகிய ஜலத்தை பருகி எனது தாகத்தை அகற்றி கொள்கிறேன்.

முகுந்த மாலா 10

ஸரஸிஜ-நயநே ஸஶங்க-சக்ரேமுரபிதி மா விரமஸ்வ சித்த! ரந்தும் |ஸுகதரமபரம் ந ஜாது ஜாநேஹரிசரண-ஸ்மரணாம்ருதேந துல்யம் || 10 ||

விளக்கம்:

ஓ மனமே தாமரைக் கண்ணனும் சங்கு சக்கரங்களைத் தங்கியவனுமான முரன் என்னும் அரக்கனை அழித்த ஹரியிடத்தில் பகதி கொள்வதை விட்டுவிடாதே ஏனென்றால் ஹரியினுடைய திருவடிகளை நினைத்தலாகிய அமிர்தத்தோடு சமமான மற்றோரு உயர்ந்த சுகத்தை ஒரு பொழுதும் அறிகிலேன்.

முகுந்த மாலா 11

மாபீர்-மந்தமநோ விசிந்த்ய பஹுதா யாமீஶ்சிரம் யாதநா꞉நாமீ ந꞉ ப்ரபவந்தி பாபரிபவ꞉ ஸ்வாமீ நநு ஶ்ரீதர꞉ |ஆலஸ்யம் வ்யபநீய பக்தி-ஸுலபம் த்யாயஸ்வ நாராயணம்லோகஸ்ய வ்யஸநாபநோதநகரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம꞉ || 11 || 

விளக்கம்:

ஓ மூட மனமே யமனுடையதான துன்புறுத்தல்களை வெகுகாலம் பலவிதமாக ஆலோசித்து பயப்படாதே பாபிகளுக்குப் பகைகளான இவை சாதியற்றவை ஏனெனில் லஷ்மீபதி நம் தலைவனல்லவா? ஆகவே சோம்பலை அகற்றிவிட்டு பக்தியினால் எளிதில் அடையக்கூடிய நாராயணனை த்யானம் செய் உலகின் துன்பங்களைத் துடைக்கின்றவன் தன் பக்தனுடைய துன்பத்தை அகற்றமாட்டானா?

முகுந்த மாலா 12 

பவஜலதி-கதாநாம் த்வந்த்வ-வாதாஹதாநாம்ஸுததுஹித்ரு-களத்ர-த்ராண-பாரார்திதாநாம் |விஷம-விஷய-தோயே மஜ்ஜதா-மப்லவாநாம்பவது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் || 12 || 

விளக்கம்:

சம்சாரமாகிய சாகரத்தில் உள்ளவர்களும்  சீதம் உஷ்ணம் சுகம் துக்கம் போன்ற இரட்டை களாகிய காற்றால் அடிக்கப்பட்டவர்களும்  பிள்ளை பெண்  மனைவி இவர்களை காப்பாற்றுதல் ஆகிய பாரத்தால் வருந்துபவர்களும்,  கொடிய விஷய சுகங்களாகிய ஜலத்தில் மூழ்கியவர்களும்   ஓடம் இல்லாதவர்களுமான  மனிதர்களுக்கு  மகாவிஷ்ணுவாகிய ஓடம் ஒரே ஒரு புகலிடமாக ஆகட்டும்.

முகுந்த மாலா 13

பவஜலதி-மகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்கதமஹமிதி சேதோ மா ஸ்ம கா꞉ காதரத்வம் |ஸரஸிஜத்ருஶி தேவே தாவகீ பக்திரேகாநரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யத்வஶ்யம் || 13 || 

விளக்கம்:

ஓ மனமே ஆழமானதும் கடக்க முடியாததுமான பிறவிக்கடலை எப்படி கடப்பேன் என்று அச்சத்தை அடையாதே தாமரைக்கண்ணனும் நரகனை அளித்தவனுமான தேவனிடத்தில் வைக்கப்பட்ட உன்னுடையதான பக்தி ஒன்றே தவறாமல் கடத்திவிடும்.

முகுந்த மாலா 14

த்ருஷ்ணாதோயே மதந-பவநோத்தூத-மோஹோர்மி-மாலேதாராவர்தே தநய-ஸஹஜ-க்ராஹ-ஸங்காகுலே ச |ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்பாதாம்போஜே வரத பவதோ பக்திநாவம் ப்ரயச்ச || 14 || 

விளக்கம்:

ஹே பரந்தாமனே பேராசையாகிய நீரையுடையதும், காமமாகிய காற்றினால் மேலுக்கு எழுப்பப்பட்ட மோகமாகிய அலைகளின் வரிசையுள்ளதும் மனைவியாகிய சூழலுடன் கூடியதும் மக்கள், உடன்பிறந்தோர்களாகிய முதலைக் கூட்டங்களால் குழம்பியதுமான ஸம்ஸார மென்னும் பெரியதான கடலில் மூழ்கியவர்களான எங்களுக்கு ஓ வரமளிப்பவரே! உம்முடைய திருவடித் தாமரைகளின் மீது பக்தியாகிய ஓடத்தை கொடுப்பீராக.

முகுந்த மாலா 15

மாத்ராக்ஷம் க்ஷீணபுண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந் பதாப்ஜேமாஶ்ரௌஷம் ஶ்ராவ்யபந்தம் தவ சரிதமபாஸ்யாந்ய தாக்யாநஜாதம் |மாஸ்மார்ஷம் மாதவ த்வாமபி புவனபதே! சேதஸாபஹ்நுவாநாந்மாபூவம் த்வத்ஸபர்யா-வ்யதிகர-ரஹிதோ ஜந்மஜந்மாந்தரே(அ)பி || 15 || 

விளக்கம்:

உலக நாதனான ஓ மாதவனே ஒரு கணநேரம்கூட உன்னுடைய பாதத்தாமரையில் பக்தியில்லாதவர்களான பாவிகளை பார்த்திலேன் உன்னுடைய சரித்திரத்தை விட்டு வேறு செவிக்கினிய அமைப்புக் கொண்ட கதைகளை கேட்டிலேன் உன்னை மனதால்கூட வெறுப்பவரை நினைத்திலேன் இப்பிறவியிலும், மற்ற பிறவியிலும் உன் பூஜை சம்பந்தம் இல்லாதவனாக இருந்திலேன்.

முகுந்த மாலா 16

ஜிஹ்வே! கீர்த்தய கேஶவம் முரரிபும் சேதோ! பஜ ஶ்ரீதரம்பாணித்வந்த்வ! ஸமர்சயாச்யுதகதா꞉ ஶ்ரோத்ரத்வய த்வம் ஶ்ருணு |க்ருஷ்ணம் லோகய லோசநத்வய! ஹரேர்-கச்சாங்க்ரியுக்மாலயம்ஜிக்ர க்ராண! முகுந்தபாத-துளஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம் || 16 ||

விளக்கம்:

நாக்கே! கேசவனை துதி செய்வாயாக ஓ மனமே! முராரியை (முரனின் பகைவனை) பஜனம் செய் இரு கைகளே ஸ்ரீதனை அர்ச்சனை செய்யுங்கள். காதுகளே! நீங்கள் அச்சுதனின் கதைகளை கேளுங்கள் கண்களே! கண்ணனை பாருங்கள் கால்களே ஹரியின் ஆலயத்திற்க்கு செல்லுங்கள் மூக்கே! முகுந்தனின் பாதத்திலுள்ள துளஸியை நுகர்வாயாக தலையே விஷ்ணுவை வணங்குவாயாக.

முகுந்த மாலா 17

ஹே லோகா꞉ ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதேஶ்-சிகித்ஸாமிமாம்யோகஜ்ஞா꞉ ஸமுதாஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாதய꞉ |அந்தர் ஜ்யோதிரமேயமேக-மம்ருதம் க்ருஷ்ணாக்யமாபீயதாம்தத்பீதம் பரமௌஷதம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் || 17 | 

விளக்கம்:

ஓ மக்களே பிறப்பு, இறப்பு என்னும் வியாதிக்கு இந்த சிகிச்சையை கேளுங்கள் அதை யாஜ்ஞவல்க்யர் முதலான யோகமறிந்த முனிவர்கள் கூறுகின்றனரோ உள்ளே அடங்கிய ஜோதியாகவும் அளவிடமுடியாததாகவும் ஒன்றாகவுமுள்ள கிருஷ்ணன் என்னும் அமிருதமானது குடிக்கப்பட்ட அந்த உயர்ந்த மருந்து கடைசியான மூக்ஷசுகத்தை அளிக்கிறது.

முகுந்த மாலா 18

ஹே மர்த்யா꞉ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத꞉ஸம்ஸாரார்ணவ-மாபதூர்மி-பஹுளம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்திதா꞉ |நாநா-ஜ்ஞாந-மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்வம் முஹு꞉ || 18 || 

விளக்கம்:

ஆபத்துக்களாகிய அலைகள் நிறைந்த பிறவிக் கடலில் நன்றாக மூழ்கி இருக்கின்ற ஓ மனிதர்களே! உங்களுக்கு உயர்ந்த நன்மையை சுருக்கமாக சொல்கிறேன். கேளுங்கள் பலவிதமான அறிவுகளை ஒதுக்கிவிட்டு மனதில் ஓம் எனும் பிரணவத்துடன் கூடிய நமோ நாராயணாய என்னும் இந்த மந்திரத்தை நமஸ்காரத்துடன் மனதில் அடிக்கடி ஜெபம் செய்யுங்கள்.

முகுந்த மாலா 19

ப்ருத்வீ ரேணுரணு꞉ பயாம்ஸி கணிகா꞉ பல்கு-ஸ்புலிங்கோ (அ) நலஸ்-தேஜோ நிஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்ரம் ஸுஸூக்ஷ்மம் நப꞉ |க்ஷுத்ரா ருத்ர-பிதாமஹ-ப்ரப்ருதய꞉ கீடா꞉ ஸமஸ்தாஸ்-ஸுரா꞉த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி꞉ || 19 || 

விளக்கம்:

எதுவானது பார்க்கப்பட்ட அளவில் பூமியானது சிறிய தூசாகவும் ஜலமெல்லாம் திவலைகளாகவும் தேஜஸ் என்பது சிறிய பொறி உருவிலுள்ள நெருப்பாகவும் காற்றானது சிறிய மூச்சுக் காற்றாகவும் ஆகாயம் மிகச் சிறிய துவாரமாகவும் சிவன், பிரமன் முதலான ஸகல தேவர்களும் சிறிய எறும்புகள் போன்று காணப்படுகின்றார்களே அப்படிப்பட்ட  உன்னுடையதான எல்லைகடந்த மஹிமையானது வெற்றி கொள்கிறது.

முகுந்த மாலா 20

பத்தேநாஞ்ஜலிநா நதேந ஶிரஸா காத்ரை꞉ ஸரோமோத்கமை꞉கண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்கீர்ண-பாஷ்பாம்புநா |நித்யம் த்வச்சரணாரவிந்த-யுகள-த்யாநாம்ருதாஸ்வாதிநாம்!அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ! ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம் || 20 || 

விளக்கம்:

தாமரைக் கண்ணனே! அமைக்கப்பட்ட கை கூப்புதலோடும் வணங்கிய தலையோடும் மயிர்க் கூச்சத்துடன் கூடிய தேகத்தோடும் தழுதழுத்த குரலோடும் வெளியில் வழிந்தோடும் கண்ணீருடைய கண்களோடும் எப்பொழுதும் உன் திருவடித் தாமரைகளைத் தியானம் செய்வதாகிய அமிருத ரஸத்தைப் பருகுகிற எங்களுக்கு எப்பொழுதும் வாழ்க்கையானது திறைவுள்ளதாக ஆகட்டும்.

முகுந்த மாலா 21

ஹே கோபாலக! ஹே க்ருபாஜலநிதே! ஹே ஸிந்துகன்யாபதே!ஹே கம்ஸாந்தக! ஹே கஜேந்த்ரகருணாபாரீண! ஹே மாதவ! |ஹே ராமாநுஜ! ஹே ஜகத்த்ரயகுரோ! ஹே புண்டரீகாக்ஷ! மாம்ஹே கோபீஜநநாத பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா || 21 ||

விளக்கம்:

ஆநிறை மேய்த்தவனே, கருணைக் கடலே கடலின் மகளான லஷ்மியின் பதியே கம்ஸனை மாயத்தவனே கஜேந்திரனைக் கருணையால் காத்தவனே, மதவனே, பலராமனின் தம்பியே! மூவுலகுக்கும் ஆசிரியனே! தாமரைக் கண்ணனே கோப ஸ்த்ரீகளின் அன்பனே! என்னை காப்பாற்று உன்னைத் தவிர வேறொருவரை நானறியேன். 

முகுந்த மாலா 22

பக்தாபாய-புஜங்க-காருடமணிஸ்-த்ரைலோக்ய-ரக்ஷாமணி꞉கோபீலோசந-சாதகாம்புதமணி꞉ ஸௌந்தர்யமுத்ராமணி꞉ |ய꞉ காந்தாமணி-ருக்மிணீ-கநகுச-த்வந்த்வைக-பூஷாமணி꞉ஶ்ரேயோ தேவஶிகாமணிர்-திஶது நோ கோபால-சூடாமணி꞉ || 22 ||

விளக்கம்:

எவன் பக்தர்களின் ஆபத்துக்களாகிய பாம்பிற்கு கருட ரத்தினமும் மூவுலகையும் ரக்ஷிக்கும் ரத்தினமும் ஆயர்குலப் பெண்களின் கண்களாகிய சாதக பக்ஷிகளுக்கு மேகமாகிய ரத்தினமும் அழகின் அடையாள மணியும் பெண்குல ரத்தினமான ருக்மிணிதேவியின் – பெரிய ஸ்தனங்களுக்கு அலங்கார ரத்தினமும், ஆயர் குலச் சூடாமணியுமான பகவான் நன்மையை அளிப்பானாக.

முகுந்த மாலா 23

ஶத்ருச்சேதைகமந்த்ரம் ஸகலமுபநிஷத்-வாக்ய-ஸம்பூஜ்ய-மந்த்ரம்ஸம்ஸாரோத்தார-மந்த்ரம் ஸமுபசிததமஸ்꞉ ஸங்க-நிர்யாண-மந்த்ரம் |ஸர்வைஶ்வர்யைக-மந்த்ரம் வ்யஸந-புஜக-ஸந்தஷ்ட-ஸந்த்ராண-மந்த்ரம்ஜிஹ்வே! ஶ்ரீக்ருஷ்ண-மந்த்ரம் ஜபஜப ஸததம் ஜன்ம-ஸாபல்ய-மந்த்ரம் || 23 ||

விளக்கம்:

ஓ நாக்கே பகைவர்களை அளிக்கும் மந்த்ரமமும் நிறைவுள்ளதும் உபநிஷத்துக்கள் போற்றும் மந்த்ரமும் பிறவிக்கடலைத் தாண்ட வைக்கும் மந்த்ரமும் சேர்ந்துள்ள (அஞ்ஞான) இருள் அகழ்வதற்கான மந்த்ரமும் ஸகல ஸம்பத்துக்களையும் அடைவிக்கும் மந்த்ரமும் துன்பங்களாகிய பாம்பு கடித்தவரைக் காக்கும் மந்த்ரமும் பிறவிப் பயன்தரும் மந்த்ரமுமாகிய ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் மந்த்ரத்தை எப்பொழுதும் ஜபித்துக்கொண்டிரு.

முகுந்த மாலா 24

வ்யாமோஹ ப்ரஶமௌஷதம் முநிமநோவ்ருத்தி ப்ரவ்ருத்யௌஷதம்தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநைகௌஷதம் |பக்தாத்யந்தஹிதௌஷதம் பவபயப்ரத்வம்ஸநைகௌஷதம்ஶ்ரேய꞉ப்ராப்திகரௌஷதம் பிப மந꞉ ஶ்ரீக்ருஷ்ண திவ்யௌஷதம் || 24 ||

விளக்கம்:

ஓ மனமே! மயக்கங்களைத் தெளிவிக்கும் மருந்தும் முனிவர்களின் மனப்போக்கை இயக்கவைக்கும் மருந்தும் அரக்கர் தலைவருக்கு இன்னலளிக்கும் மருந்தும் மூவுலகங்களுக்கும் பிழைப்பிக்கும் சிறந்த மருந்தும் பக்தர்களுக்கு மிக்க இதமான மருந்தும் ஸம்ஸார பயத்தை அழிக்கும் சிறந்த மருந்தும் நன்மைகளை அடைவிக்கும் மருந்துமான ஸ்ரீகிருஷ்ணன் என்னும் திவ்யமான ஒளஷதத்தை பருகுவாயாக.

முகுந்த மாலா 25

அம்நாயாப்யஸநாந்யரண்யருதிதம் வேதவ்ரதாந்யந்வஹம்மேதஶ்சேதபலாநி பூர்தவிதய꞉ ஸர்வே ஹுதம் பஸ்மநி |தீர்தாநாமவகாஹநாநி ச கஜஸ்நாநம் விநா யத் பத-த்வந்த்வாம்போருஹ-ஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தேவஸ்꞉ ஸ நாராயண꞉ || 25 ||

விளக்கம்:

எவருடைய திருவடித் தாமரைகளின் ஞாபகத்தை தவிர்த்துவிட்டு வேதங்களைப் பயிற்சி செய்தல் காட்டுக்கு கதறலாகுமோ தினந்த்தோறும் (செய்யும்) வேதங்களில் கூறிய விரதங்கள் உடலிலுள்ள கொழுப்புநீர் அகல்வதாகிய பலனை உடையதாகுமோ கிணறுக்குளம் வெட்டுவது போன்ற காரியங்கள் அனைத்தும் (நெருப்பில்லாத) சாம்பலில் ஹோமம் செய்யப்பட்டதாக ஆகுமோ தீர்த்தங்களில் மூழ்குதலும் யானைகள் மூழ்குவதற்கு ஒப்பாகுமோ அந்த பகவான் வெற்றிகொள்கிறார்.

முகுந்த மாலா 26

ஶ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபிநோ (அ)பி |ஹா ந꞉ பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மிந்தேந ப்ராப்தம் கர்ப்பவாஸாதி துக்கம் || 26 ||

விளக்கம்:

ஸ்ரீயுடன் கூடியதான நாராயணனென்று பெயருள்ள நாமத்தை சொல்லி பாவிகளாக இருப்பினும் எவர்தாம் தாம் விரும்பியதை அடையவில்லை ஐயோ! நமக்கு முன்னம் அதில் வார்த்தையானது சொல்லவில்லை அந்த காரணத்தால் கர்ப்பவாஸம் முதலான துக்கம் அடையப்பட்டது.

முகுந்த மாலா 27

மஜ்ஜந்மந꞉ பலமிதம் மதுகைடபாரேமத்ப்ரார்த்தநீய மதநுக்ரஹ ஏஷ ஏவ |த்வத் ப்ருத்ய-ப்ருத்ய-பரிசாரக ப்ருத்ய-ப்ருத்ய-ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோகநாத! || 27 ||

விளக்கம்:

மது, கைடபன் என்பவர்களை அழித்தவரே என் பிறவிக்கு பயன் இதுதான் (என்றால்) உம்மிடம் வேண்டக்கூடிய எனக்குச் செய்யவேண்டிய அநுக்ரஹம் இதுதான் ஏ உலக நாதனே உன் அடியார்க்கு அடியாரின் என்ற வரிசையில் ஏழாவது அடியானாக என்னை நினைப்பாயாக.

முகுந்த மாலா 28

நாதே ந꞉ புருஷோத்தமே த்ரிஜகதாமேகாதிபே சேதஸாஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸுரே நாராயணே திஷ்டதி |யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேஶமல்பார்த்ததம்ஸேவாயை ம்ருகயாமஹே நரமஹோ மூகா வராகா வயம் || 28 ||

விளக்கம்:

மூவுலகங்களுக்கும் ஒரே தலைவனும் மனத்தால் வணங்கத்தக்கவரும் தன்னுடையதான ஸ்தானத்தை அளிப்பவனும் புருஷோத்தமனுமான நாராயணனென்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது சிலக்ரமங்களுக்கு மட்டுமே தலைவனும் சொற்பமாகப் பணம் அளிப்பவனுமான யாரோ ஒரு தரக்குறைவான மனிதனை வேலைக்காக தேடி அலைகிறோம். ஆச்சரியம்! நாம் மூடர்கள் அற்பமானவர்கள்.

முகுந்த மாலா 29

மதன பரிஹர ஸ்திதிம் மதீயேமநஸி முகுந்த-பதாரவிந்த-தாம்நி |ஹர-நயந-க்ருஶாநுநா க்ருஶோஸிஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே꞉ || 29 ||

விளக்கம்:

மன்மதனே முகுந்தனின் திருவடித் தாமரை இருக்குமிடமான என்னுடைய மனத்தில் இருத்தலை விட்டுவிடு. சிவனின் கண்ணாகிய அக்னியினால், அழிந்திருக்கிறாய். முராரியான விஷ்ணுவினுடைய சக்கராயுதத்தின் பராக்கிரமத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லையா?

முகுந்த மாலா 30

தத்த்வம் ப்ருவாணாநி பரம் பரஸ்மாத்மது க்ஷரந்தீவ ஸதாம் பலாநி |ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வேநாமாநி நாராயணகோசராணி || 30 ||

விளக்கம்:

ஓ நாக்கே கை கூப்பியவனாக இருக்கிறேன் உயர்ந்ததைக் காட்டிலும் உயர்ந்ததும் உண்மைப்பொருளை கூறுபவையும் தேனே பொழிபவைபோல் உள்ளவையும் நல்லவர்களின் பயன்களாகவும் உள்ள நாராயணனைக் குறிக்கும் நாமங்களை ஜபம் செய்.

முகுந்த மாலா 31

இதம் ஶரீரம் பரிணாம-பேஶலம்பதத்யவஶ்யம் ஶ்லத-ஸந்தி-ஜர்ஜரம் |கிமௌஷதை꞉ க்லிஶ்யஸி மூட துர்மதேநிராமயம் க்ருஷ்ண-ரஸாயநம் பிப || 31 ||

விளக்கம்:

இந்த உடலானது முதிர்ச்சியால் இளைத்ததாகி பூட்டுக்கள் தளர்ந்து போய் நிச்சயமாக விழப்போகிறது. ஓ முடனே, துர்புத்தியே, மருந்துகளால் ஏன் சிரமமப்படுகிறாய். தீமையற்றதான கிருஷ்ணன் என்னும் ரஸாயனத்தை குடிப்பாயாக.

முகுந்த மாலா 32

தாரா வாராகர-வரஸுதா தே தநூஜோ விரிஞ்சி꞉ஸ்தோதா வேதஸ்தவ ஸுரகணோ ப்ருத்யவர்க꞉ ப்ரஸாத꞉ |முக்திர் மாயா ஜகதவிகலம் தாவகீ தேவகீ தேமாதா மித்ரம் வலரிபுஸுதஸ்-த்வய்யதேந்யந்ந ஜாநே || 32 ||

விளக்கம்:

உன்னுடைய பத்தினி பாற்கடலின் திருமகள் தனையன் பிரம்மா துதிப்பது வேதம் பணிபுரிவோர் தேவரகூட்டம் அநுக்ரஹம் மோக்ஷம் மாயை எல்லா உலகமும் உன்னுடைய தாய் தேவகீ தேவி நண்பன் இந்திரன் மகனான அர்ஜுனன் உன்னிடத்தில் இதைக்காட்டிலும் மறொன்றை நான் அறியேன்.

முகுந்த மாலா 33

க்ருஷ்ணே ரக்ஷது நோ ஜகத்த்ரயகுரு꞉ க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்க்ருஷ்ணே நாமரஶத்ரவோ விநிஹதா꞉ க்ருஷ்ணாய துப்யம் நம꞉ |க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண! ரக்ஷஸ்வ மாம் || 33 ||

விளக்கம்:

மூவுலகுக்கும் பெரியோனான கிருஷ்ணன் நம்மை ரக்ஷிக்கட்டும் நான் கிருஷ்ணனை வணங்குகிறேன் கிருஷ்ணனால் தேவரின் பகைவர்கள் கொல்லப்பட்டனர் கிருஷ்ணனான உனக்காக நமஸ்காரம் இந்த உலகம் கிருஷ்ணனிடமிருந்து தோன்றியது நான் கிருஷ்ணனின் தாஸன் இது எல்லாம் கிருஷ்ணனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது ஹே கிருஷ்ணனே என்னை காப்பாற்று.

முகுந்த மாலா 34

தத்த்வம் ப்ரஸீத பகவந் குரு மய்யநாதேவிஷ்ணோ! க்ருபாம் பரமகாருணிக꞉ கில த்வம் |ஸம்ஸார-ஸாகர-நிமக்ந-மநந்த தீநம்உத்தர்த்துமர்ஹஸி ஹரே! புருஷோத்தமோ(அ)ஸி || 34 ||

விளக்கம்:

ஹே விஷ்ணுபகவானே! முடிவில்லாதவனே! ஹரியே நீ புருஷர்களில் சிறந்தவனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கிறாய் அன்றே. அப்படிப்பட்ட நீ அருள்புரிவாயாக பிறவிக்கடலில் மூழ்கியவனும் ஏழையுமான என்னை கரையேற்றுவதற்கு தகுந்தவனாக இருக்கிறாய்.

முகுந்த மாலா 35

நமாமி நாராயண-பாதபங்கஜம்கரோமி நாராயண-பூஜநம் ஸதா |வதாமி நாராயண-நாம நிர்மலம்ஸ்மராமி நாராயண-தத்த்வமவ்யயம் || 35 ||

விளக்கம்:

நான் எப்பொழுதும் ஸ்ரீமந்நாராயணன் திருவடிகளையே வணங்குகிறேன்; அவன் பூஜையையே செய்கிறேன். அவன் திருநாமத்தையே ஜெபிக்கிறேன். நாராயணன் என்னும் தத்துவப் பொருளையே நினைக்கிறேன்.

முகுந்த மாலா 36

ஶ்ரீநாத நாராயண வாஸுதேவஶ்ரீ க்ருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே |ஶ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரேஶ்ரீராம பத்மாக்ஷ ஹரே முராரே || 36 ||

விளக்கம்:

லஷ்மீ பதியே! நாராயணனே! வசூதேவ குமாரனே! கண்ணபிரானே! பக்தர்களின் அன்பனே! சக்கரத்தைக் கையில் ஏந்துபவனே! பத்மநாபனே! அச்சுதனே! கைடபனை அழித்தவனே! ஸ்ரீ ராமா! தாமரைக் கண்ணனே! ஹரியே முராரியே.

முகுந்த மாலா 37

அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ணகோவிந்த தாமோதர மாதவேதி |வக்தும் ஸமர்தோ(அ)பி ந வக்தி கஶ்சித்அஹோ ஜநாநாம் வ்யஸநாபிமுக்யம் || 37 ||

விளக்கம்:

அநந்த, வைகுந்தா, முகுந்தா, கிருஷ்ணா, கோவிந்தா, தாமோதரா, மாதவ, என்று சொல்வதற்கு சாமர்த்தியம் உள்ளவனாக இருந்தும் மக்கள் சொல்வதில்லை மாறாக உலக துக்கங்களிலேயே ஊன்றிப்போய் விட்டனரே.

முகுந்த மாலா 38

த்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்ஹ்ருத்பத்ம-மத்யே ஸததம் வ்யவஸ்திதம் |ஸமாஹிதாநாம் ஸததாபயப்ரதம்தே யாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் || 38 ||

விளக்கம்:

ஸ்ரீ மகாவிஷ்ணு முடிவில்லாதவர்; அழிவில்லாதவர்; எப்பொழுதும் மனதில் குடிகொண்டிருப்பவர்; தன் பக்தர்களுக்கு எப்பொழுதும் அபயமளிப்பவர்; அத்தகைய மஹாவிஷ்ணுவை தியானம் செய்பவர்கள் உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தைச் சேருவார்கள்.

முகுந்த மாலா 39

க்ஷீரஸாகர-தரங்க-ஶீகரா(அ) ஸார–தாரகித-சாரு-மூர்தயே |போகிபோக-ஶயநீய-ஶாயிநேமாதவாய மதுவித்விஷே நம꞉ || 39 ||

விளக்கம்:

பாற்கடலில் அலைத்துளிகளால் நக்ஷத்திரம் உள்ளது போல் பிரகாசிக்கின்ற அழகிய திருமேனி படைத்தவரும், ஆதிசேஷனின் மேனியாகிய படுக்கையில் படுப்பவரும், மதுவென்னும் அரக்கனை அழித்தவருமான ஸ்ரீ லக்ஷ்மி பதியான நாராயணனுக்கு நமஸ்காரம்.

முகுந்த மாலா 40

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதிதரௌ கவிலோகவீரௌமித்ரே த்விஜந்மவர-பாரஸவா-வபூதாம் |தேநாம்புஜாக்ஷ-சரணாம்புஜ-ஷட்பதேநராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஶேகரேண || 40 ||

விளக்கம்:

 எவருக்கு அன்பர்களும் கேள்விஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும், வீரர்களுமான அந்தண-வர்ணங்களில் பிறந்தவர்களான இருநண்பர்கள் இருந்தார்களோ அந்த தாமரை கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவரான குலசேகரர் என்ற அரசரால் இந்த ஸ்தோத்திரம் இயற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *