
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான முகத்தையும், வசீகரமான உடல்வாகையும் பெற்றிருப்பார்கள். ஏனெனில் இதன் அதிபதி சந்திர பகவான் ஆவார். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இனிமையாக, எளிமையாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் பணிபுரிவதை விட சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்றே எண்ணுவார்கள். செய்கின்ற வேலையால் மதிப்பும், மரியாதையும் இவர்களுக்கு வந்து சேரும். ஆளுக்கு தகுந்தாற் போல் முடிவுகளை மாற்றிக் கொள்ளாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார்கள். எதிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பவர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் உஷாராக இருப்பார்கள். எந்தவொரு பிரச்னையையும் தீர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். பிறருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். இயற்கை விரும்பிகளாக இருப்பார்கள். தங்களது அயராத முயற்சியால் எந்த லட்சியத்தையும் அடைந்துவிடுவார்கள்.
கல்வி
கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். வேத சாஸ்திரங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். சித்தர், பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்று பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் போன்ற துறைகளில் சாதனை படைப்பார்கள்.
தொழில்
கமிஷன், கட்டிட காண்டிராக்ட், ஏஜென்சி, வண்டி, வாகனம், உணவு வகை போன்ற துறைகளில் ஈடுபடுவார்கள். எத்தகைய துன்பங்கள் வந்தாலும் துவண்டு விடாமல் உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். எந்த தொழிலாக இருந்தாலும் சரி, உத்தியோகமாக இருந்தாலும் சரி அதில் பல சாதனைகளை படைப்பார்கள். எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். கொள்கைகளில் சற்று அழுத்தமானவர்கள் என்பதால் அடிக்கடி பணியாளர்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.
குடும்பம்
சிறிய வயதில் பல துன்பங்களை சந்தித்தாலும் மத்திய வசதியிலிருந்து வசதி வாய்ப்புகள் வந்து சேரும். எளிதில் காதல் வயப்படக்கூடியவர்கள். தாய்க்கு மரியாதை தருபவர்கள். மனைவி சொல்லே மந்திரம் என நினைப்பார்கள். எந்த ஒரு முடிவையும் மனைவியை கலந்து ஆலோசித்துத்தான் எடுப்பார்கள். அளவான குடும்பம் அமையும். தேவையில்லாமல் மற்றவர்களில் விஷயங்களில் ஈடுபடமாட்டார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்கள். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இரக்க சுபாவம் கொண்டவர்கள் என்பதால் பாவ, புண்ணியம் பார்த்து உதவும் குணம் கொண்டவர்கள். உணவுப்பிரியர்களாக இருப்பார்கள்.
ஆரோக்கியம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தோல் வியாதி, கண்கள் மற்றும் மூக்கில் பிரச்னைகள், உடலில் கெட்ட நீர் சேருவது போன்ற சூழ்நிலைகளால் மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.
அஸ்தம் நட்சத்திர குணங்கள்
அஸ்தம் என்றால் உள்ளங்கை என்று பொருள். சந்திரனை அதிபதியாக கொண்டுள்ள நட்சத்திரம். கன்னி ராசியில் அமைந்துள்ளது. இதன் ராசிநாதன் புதன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ உதவ, இவர்களது வளர்ச்சியும் உயர்ந்து கொண்டேயிருக்கும். தர்மத்திற்காக இவர்கள் செலவிடும் தொகையை விட பல மடங்கு செல்வம் இவர்களுக்கு பெருகும்.
பொதுவான குணங்கள்
எப்போதும் தேனியைப் போல சுறுசுறுப்பாக இருப்பார்கள். முன்கோபிகளாக இருப்பார்கள். தாயை மிகவும் நேசிப்பவர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். வேத சாஸ்திரங்களை அறிவதில் ஆர்வம் காட்டுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு சம உரிமைகளை தருவார்கள். எந்த காரியமானாலும் அவர்களிடம் கேட்டுத்தான் முடிவு மேற்கொள்வர்கள்.
நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதால் இவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட இசையை கேட்டுக் கொண்டே செய்வார்கள். எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணம் கொண்டவர்கள். யாரிடமும் பாகுபாடு காட்டமாட்டார்கள்.
எந்த நிலையிலும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள். பயணங்கள் மேற்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தாமல் தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். எதிரிகளை வெற்றி பெறும் ஆற்றலைப் பெற்றவர்கள். மன சஞ்சலங்களைப் போக்க அடிக்கடி தியானத்தில் ஈடுபடுவார்கள். அனைத்து வசதிகளையும் பெற்றிருப்பார்கள்.
அஸ்தம் முதல் பாதம்
இது செவ்வாயின் அம்சம் பொருந்தியது. எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை பெற்றவர்கள். பொய், புரட்டு இருக்காது. சூழ்நிலைக்கேற்ப சமார்த்தியமாக நடந்து கொள்வார்கள். சண்டையை விரும்பாமல் சமாதானத்தை விரும்புவார்கள். அடிக்கடி ஆன்மீக சுற்றுலா செல்வார்கள். குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் அதிக பற்று வைத்திருப்பார்கள். புதுமை விரும்பிகள். பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் வழங்குவார்கள். ஆனால் கண்காணித்துக் கொண்டும் இருப்பார்கள்.
அஸ்தம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை சுக்கிரன் ஆள்கிறார். சுகபோகங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். நண்பர்கள் கூட்டத்தைப் பெற்றிருப்பார்கள். படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வருவார்கள். சமூகப் பணிகளைச் செய்வதில் அக்கறை காட்டுவார்கள்.
அஸ்தம் மூன்றாம் பாதம்
இதன் அதிபதி புதன். எதையும் மாறுபட்ட கோணத்தோடு சிந்தித்து செயல்படுவார்கள். தெய்வ பக்தியும், நேர்மையான குணத்தையும் கொண்டவர்கள். பழையவற்றை மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள். துரோகிகளைக் கண்டால் அறவே பிடிக்காது. உடன் பிறந்தவர்களால் இன்னல்களை அனுபவிப்பவர்கள். சமூக நலனுக்காக பாடுபடுவார்கள். தவறுகளை கண்டால் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டார்கள். பேச்சாற்றல்மிக்கவர்கள்.
அஸ்தம் நான்காம் பாதம்
நான்காம் பாதம் சந்திரனின் அம்சம் பொருந்தியது. தாயிடம் அதிக அன்பு காட்டுவார்கள். இரக்க குணமிக்கவர்கள். சிறந்த அறிவைப் பெற்றிருந்தாலும் கர்வம் கொள்ளாமல் அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எந்த துன்பத்தையும் எளிதில் கடந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்கள். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள். மகான்களை தரிசித்து ஆசிகளைப் பெறுவதுடன் அவர்களது ஆன்மீகப் பணிகளுக்கு முடிந்த உதவியைச் செய்வார்கள்.
அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, கோமலில் அமைந்துள்ள அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில். தாயார் அன்னபூரணி. தங்களது தோஷங்கள் அகல அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.