ரேவதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான உடலமைப்பும், வசீகரமான கண்களையும் கொண்டவர்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய எண்ணுவார்கள். மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டே அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்களுடைய பேச்சாற்றலால் ஜெயித்துவிடுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்வார்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டார்கள். அப்படியே நம்பினாலும் கூட யோசித்தே செயல்படுவார்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி வழிகாட்டுவார்கள். இயற்கையின் மீது அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். அறிவுத்திறனால் எந்த காரியத்தையும் எளிதில் முடித்துவிடுவார்கள். முடிவுகள் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் ஏற்படுகின்ற தடைகள் அனைத்தையும் கடந்து வெற்றி பெறுவார்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். சுதந்திரமான எண்ணம் கொண்டவர்கள். சில சமயங்களில் பழமைவாதிகள் போல செயல்படுவார்கள். எவ்வளவு வயதானாலும் இவர்கள் இளமையாகவே காட்சியளிப்பார்கள். சபை நாகரீகம் தெரிந்து நடந்து கொள்வார்கள்.

கல்வி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலைப் பெற்றிருப்பார்கள். உயர்கல்வி கற்பார்கள். கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் இருக்கும். தங்களது அறிவாற்றலைக் கொண்டு எந்த காரியத்தையும் எளிதில் சாதித்துவிடுவார்கள். வானவியல் மற்றும் ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தொழில்
முதலீடுகள் இல்லாமலே முன்னேறும் ஆற்றல் படைத்தவர்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள். சமுதாயத்தில் புகழ் பெற்ற மனிதர்களாக வலம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியினாலேயே முன்னேற்றம் காண்பார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளில் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்பாதிக்கும் யோகத்தைப் பெற்றவர்கள். இதன் விளைவாக சுகமான வாழ்வு வாழ்வார்கள்.

குடும்பம்
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அழகான முகத்தோற்றமும், குண அமைப்பும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். மனைவி, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் வைத்திருப்பார்கள். பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து வளர்ப்பார்கள். தெளிந்த நீரோடை போல மனம் இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி கரைபுரண்டோடும். தன்னுடைய பேச்சாற்றலால் உறவினர்களையும் தன் வசம் வைத்திருப்பார்கள்.

ஆரோக்கியம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் உண்டானலும் கூட உடனே மனம் தளர்ந்துவிடுவார்கள். இளம் வயதில் சளித் தொல்லைகள், நீர் தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகலாம். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரேவதி நட்சத்திர குணங்கள்
புதனுக்குரிய மூன்றாவது நட்சத்திரம் ரேவதி. ஜோதிட ராசிகளில் கடைசியாக வரும். மீன ராசியில் வருகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகுடையவர்களாக இருப்பார்கள். சந்தர்ப்பங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள். உள்ளுணர்வின் வாயிலாக பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். அனுபவ அறிவையும், தத்துவ அறிவையும் கொண்டு மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

பொதுவான குணங்கள்
பேச்சாற்றல்மிக்கவர்கள். எத்தனை பேர் கூடியிருந்தாலும் தனது பேச்சினால் அனைவரையும் எளிதில் கவர்வார்கள். மூலதனமே இல்லையென்றாலும் தனது மூளையின் பலத்தினால் முன்னேற்றம் காண்பார்கள். சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டவராக இருப்பார். உறவினர்களை விட அன்னியர்களிடம் அன்பு காட்டுவார்கள். சமயோஜித புத்தியால் மற்றவர்களை எளிதாக வசப்படுத்திவிடுவர்.

எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயலாற்றுவார்கள். வயதனாலும் கூட இளமைத் தோற்றத்துடன் காணப்படுவார்கள். மனைவி மீது பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். பலர் ஓவியர், படைப்பாளி, எழுத்தாளர்களாக இருப்பார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியியல், மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளில் கோலோச்சுவார்கள்.

உடன் பிறந்தவர்கள் மீது கொண்ட பாசத்தால் பூர்வீக சொத்துக்களைக் கூட விட்டுக் கொடுக்கும் குணமுள்ளவர்கள். வஞ்சகம் அறியாதவர்கள். மனதை எப்போதும் தெளிந்த நீரோடை போல் வைத்திருப்பார்கள். தாராள குணமும், இளகிய மனமும் இவர்களது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும். சமூகத்தில் ஒரு வி.ஐ.பி.யாக விளங்குவார்கள்.

ரேவதி முதல் பாதம்
இந்த பாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி செய்வதில் சிறந்து விளங்குவார்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையோடு காணப்படுவார்கள்.

ரேவதி இரண்டாம் பாதம்
இதில் பிறந்தவர்கள் பல திறமைகள் கொண்டவராக இருப்பார்கள். நிலையான புத்தி இருக்காது. எளிதில் உணர்ச்சிவப்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை விரும்பாதவர்கள். வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள்.

ரேவதி மூன்றாம் பாதம்
இதில் பிறந்தவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம்.

ரேவதி நான்காம் பாதம்
எந்த செயலையும் செய்து வெற்றி காண்பார்கள். உண்மையையே பேசுவார்கள். சுகபோகமாக வாழக்கூடியவர்கள். எதிரிகளை வெல்லும் திறமை படைத்தவர்கள். மற்றவர்களை மதிக்கவும் தெரிந்தவர்கள்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா, தாத்தயங்கார் பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தாயார் கருணாகர வல்லி அம்மன். ரேவதி நட்சத்திரக்கார்கள் தங்களது தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். நீர், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *