மூலம் நட்சத்திரம் பொது பலன்கள்

மூலம் நட்சத்திரம் வாயு மைந்தனான ஸ்ரீ ஆஞ்சநேயரின் நட்சத்திரமாகும். இதில் பிறந்தவர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள். இல்லறத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்கள். இவர்களது நற்குணங்களால் பெயரும், புகழும் அடைவார்கள். தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவார்கள். சிறிய வயதிலேயே நல்ல உடல்வாகும், பேச்சாற்றலும் உள்ளவர்களாக இருப்பார்கள். வரவுக்கு மேல் செலவு செய்வார்கள். இதனால் பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் மிக நேர்மையாக நடந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். செய்நன்றி மறவாதவர்கள். இதனால் நண்பர்கள் வட்டம் சற்று பெரியதாக இருக்கும். வேலை, தொழில் இரண்டிலும் வெற்றி பெறுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் சமார்த்தியமாக கையாண்டு வெற்றி பெறுவார்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவும் மனம் படைத்தவர்கள். சுயமரியாதை குணம் கொண்டவர்கள். எப்போதும் அமைதியையே விரும்புவார்கள். நீதியின் மீதும், தர்மத்தின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கல்வி

கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தத்துவயிலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். சகல விஷயங்களிலும் ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள். எழுத்து, கலை மற்றும் பொதுத்துறையில் வெற்றி பெறுவார்கள். சிறந்த பேச்சாற்றலைப் பெற்றிருப்பார்கள்.

தொழில்

பணிபுரியும் நிறுவனங்களுக்கு விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மிகப்பெரிய பதவிகளை வகிப்பார்கள். மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சிலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் சொந்த தொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருத்துவ கம்பெனி போன்ற துறைகளில் ஜொலிப்பார்கள்.

குடும்பம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரியோர்களிடமும், பெற்றோர்களிடமும் மரியாதையும் பாசமும் வைத்திருப்பார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இவர்களது குணங்களும், வாழ்க்கைத் துணையின் குணங்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும். பிள்ளைகளை திட்டமிட்டு படிக்க வைத்து வளர்ப்பார்கள். பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள்.

ஆரோக்கியம்

இவர்களுக்கு சிறு வயதில் கேது திசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரலாம். பைல்ஸ், கல்லீரல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, இடுப்பு வலி, அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கலாம்.

மூலம் நட்சத்திர குணங்கள்


நட்சத்திர வரிசையில் 17வது நட்சத்திரமாக அமைகிறது மூலம் நட்சத்திரம். இதன் அதிபதி கேது பகவான். தனுசு ராசிக்குரிய நட்சத்திரம் மூலம். அனுமானுக்குரிய நட்சத்திரம் இது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோரையும், பெரியோரகளையும் மதித்து நடக்கும் குணம் படைத்தவர்கள். கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.

பொதுவான குணங்கள்

ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிறந்த கல்வியறிவையும், பேச்சாற்றலையும் பெற்றிருப்பார்கள். கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் வந்து சேரும். அனைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வேலை செய்யும் இடத்தில் நிர்வாகத்திற்கு மிகுந்த விசுவாசத்தோடு இருப்பார்கள். மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையப் பெற்றவர்கள்.

குடும்பத்தினர் மீது பாசத்தோடு இருப்பார்கள். உழைப்பதற்கு சளைக்கமாட்டார்கள். எந்த பிரச்னைகளானாலும் சாதுர்யமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். சித்தர் பீடங்களுக்கு சென்று தியானிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். தர்ம சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். பிள்ளைகளின் கல்வி விஷயத்திலும், எதிர்கால வாழ்விலும் கவனம் செலுத்துவார்கள்.

மூலம் முதல் பாதம்
செவ்வாய் இதன் அதிபதியாகிறார். எத்தனை துன்பங்கள் வந்தாலும் துவண்டு விடாமல் துணிந்து எதிர்த்து நின்று சமாளிப்பார்கள். மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள். துரோகிகளை மன்னிக்கமாட்டார்கள். மனைவியிடமும், பிள்ளைகளிடமும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். திட்டமிட்டு செலவு செய்வார்கள். எடுத்த காரியத்தை எப்படியும் நிறைவேற்றிவிடுவார்கள்.

மூலம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை சுக்கிரன் ஆட்சி செய்கிறார். குடும்ப பற்றுள்ளவர்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் பெற்றவர்கள். உண்மைக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். எதிரியைக் கூட மன்னிக்கும் குணம் பெற்றவர்கள். பல மொழிகள் கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். இரக்கக் குணம் உள்ளவர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள்.

மூலம் மூன்றாம் பாதம்
புதன் மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்கிறார். அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். பல தொழில்கள் மூலம் செல்வம் ஈட்டுவார்கள். போராட்ட குணம் கொண்டவர்கள். புதுமை விரும்பிகள். மனோதத்துவம் அறிந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு சமார்த்தியமாக நடந்து கொள்வார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். சுதந்திர விரும்பிகள்.

மூலம் நான்காம் பாதம்
இதன் அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பண்பு அதிகமிருக்கும். எல்லோரையும் நேசிப்பார்கள். வாதங்கள் செய்வதில் வல்லவராக இருப்பார்கள். எப்போதும் சிரித்த முகத்தோடு காணப்படுவார்கள். பல்துறை அறிவை பெற்றிருப்பார்கள். யாரையும் சுலபத்தில் நம்பமாட்டார்கள். தாயிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் துடிப்பாக இருப்பார்கள். எதையும் திட்டமிட்டுச் செயல்படுவார்கள்.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்


திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், மப்பேட்டில் அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தாயார் புஷ்பகுஜாம்பாள். மூலம் நட்சத்திரக்கார்கள் தங்களது தோஷங்கள் அகல இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இசைத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பெரும் புகழ் கிடைக்கும். துர்க்கையம்மன் திருவடிகளில் மகிஷன் உருவம் உள்ளதால், செவ்வாய், வெள்ளி தோறும் ராகு காலங்களில் (42 வாரங்கள்) எலுமிச்சை பழத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *