
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகு கொண்டவர்களாக இருப்பார்கள். அழகான ஆடை, அணிகலன்கள் அணிவதில் பிரியர்கள். எப்போதும் மனம் அலைபாய்ந்து கொண்ட இருக்கும். பகட்டான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எப்போதும் நேர்மையான வழியையே தேர்ந்தெடுப்பார்கள். தன்மானமிக்கவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். ஒருவர் உதவி கேட்கும் முன்னரே அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். எப்போதும் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை சார்ந்திருப்பது இவர்களுக்கு பிடிக்காது. பின்னாடி வரப்போகின்ற விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறன் பெற்றவர்கள். இயல்பான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். எப்போதும் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள். விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மையால் மற்றவர்களிடமிருந்து எந்த ஒரு ஆதாயத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள்.
கல்வி
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைகளை கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள். புத்திசாலிகளாகவும் விளங்குவார்கள். தத்துவங்களை கற்பதில் ஈடுபாடு காட்டுவார்கள்.
தொழில்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். அரசு உத்தியோகமாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் எதிலும் சம்பாதிக்கும் யோகம் இருக்கும். சுற்றுலாத்துறை, பொது மக்கள் தொடர்புத் துறை, வர்த்தகத் துறை போன்றவற்றில் பணிபுரியும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். சூதாட்டத்தின் வாயிலாகவும் பணம் வந்து சேரும் யோகம் உண்டு. கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.
குடும்பம்
சிறந்த பேச்சாற்றலைப் பெற்றிருப்பதால் மனைவி, பிள்ளைகளை மட்டுமில்லாது உற்றார் உறவினர்களையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பார்கள். பிறருக்காக எதையும் தியாகம் செய்ய துணிந்தவர்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள்.
ஆரோக்கியம்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள். சிற்றின்ப பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும் வாய்ப்புள்ளது. சர்க்கரை வியாதி, மனநல பாதிப்புகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
பூரம் நட்சத்திர குணங்கள்
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். ராசி சூரியன். காண்பவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டவர்கள். யதார்த்தமானவர்கள். ஆன்மிகத் தேடல் இருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்கள். கருணையும், இரக்கமும் கொண்டவர்கள். பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். எதையும் முன்கூட்டியே அறிவும் திறன் பெற்றவர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள். சற்று முன்கோபிகளாக இருப்பார்கள்.
பொதுவான குணங்கள்
கடல் கடந்து சென்று வணிகம் செய்யும் அமைப்பைப் பெற்றவர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சிறந்து விளங்குவார்கள். தத்துவத்தில் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோரை மதிக்கக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக பம்பரமாக சுழல்வார்கள். எந்த வேலையும் உடனே செய்து முடித்து விடுவார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்கள்.
புத்திசாலிகளாகவும், எதிரிகளை வெல்லும் திறமை படைத்தவர்களாகவும் விளங்குவார்கள். கடின உழைப்பினால் புகழையும், பொருளையும் ஈட்டுவார்கள். உறவினர்களையும், நண்பர்களையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். மத்திம வயதில் வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். செய்த நன்றியை மறக்கமாட்டார்கள். பங்குச்சந்தையில் வருவாய் வரும் வாய்ப்புள்ளது. சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணம் உள்ளவர்கள். நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
மற்றவர்கள் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். தான தர்மங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். சிறந்த குடும்பஸ்தராகவும், பெரிய வியாபாரியாகவும் அரசியல் ஆதாயம் பெறுபவராகவும் இருப்பார்கள்.
பூரம் ஒன்றாம் பாதம்
முதல் பாதத்தை சூரியன் ஆட்சி செய்கிறார். நல்ல திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த நினைவாற்றலும், பேச்சாற்றலும் உடையவர்கள். எந்த விஷயத்தையும் போராடி எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று உழைக்கக் கூடியவர்கள். வாழ்க்கையில் நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பார்கள்.
பூரம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை புதன் ஆட்சி செய்கிறார். அனைத்து திறமைகளும் இருந்தாலும் கூட நிறைய தோல்வியை எதிர்கொள்வார்கள். தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்ற எண்ணம் கொண்டவர்கள். தோல்வியை தாங்கமாட்டார்கள். பிறரை சார்ந்து வாழ நினைப்பவர்கள். தெய்வ பக்தி கொண்டவர்கள்.
பூரம் மூன்றாம் பாதம்
சுக்கிரன் இதன் அதிபதியாகிறார். ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். பேராசைக்காரர்கள். பிறரைப் பற்றி கவலை கொள்ளாமல் தனது முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக வைத்துக் கொள்வார்கள்.
பூரம் நான்காம் பாதம்
செவ்வாய் நான்காம் பாதத்தை ஆட்சி செய்கிறார். எதிலும் அவசரம் காட்டுபவர்கள். எவ்வளவு வேகத்தில் சேமிக்கிறார்களோ அதே அதை செலவும் செய்து விடுவார்கள். திட்டமிடுதல் இருக்காது. தெரியாமல் செய்யும் தவறுகளால் பல இன்னல்களை அனுபவிப்பார்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி வந்தால் துன்பங்கள் நீங்கும்.
பூரம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில். தாயார் பிரஹன் நாயகி (பெரியநாயகி). தங்களது தோஷங்கள் நீங்க பூரம் நட்சத்திரக்கார்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கிரக தோஷம், நாக தோஷம், மன நோயாளிகள் அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.