பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலையும், பேச்சாற்றலையும் பெற்றிருப்பார்கள். சற்று முன்கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். கடவுள் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருப்பார்கள். சிறந்த கொள்கைவாதியாக இருப்பார்கள். பணத்தை விட அறிவுக்குத் தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள். எதையும் தொலைநோக்கு பார்வையுடன் அணுகுவார்கள். இதனால் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். நியாய, அநியாயங்களை தைரியமாக எடுத்துரைப்பார்கள். எந்த ஒரு பிரச்னையையும் நியாயத்தின் வழி நின்று தீர்த்து வைப்பார்கள். தன்னைப் பற்றி யாராவது குறை கூறினால் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அப்பாவி பிழைக்கத் தெரியாதவர் என மற்றவர்களால் பேசப்பட்டாலும் சாதுர்யமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். எல்லா விஷயங்களும் தெரிந்தாலும் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்றவர்களின் உணர்வுகளுக்கும், பேச்சுக்களுக்கும் மதிப்பளிப்பார்கள். காலத்திற்கேற்ற மாதிரி தன்னை மற்றிக் கொள்ளாமல் பழைமை, பாரம்பரிய வழிகளையே பின்பற்றி நடப்பவர்கள். இவர்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. மிகவும் இளகிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவார்கள்.

கல்வி
சிறந்த கல்வியையும், ஞானத்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சாதித்துக் காட்டுவார்கள். அறிவியல், வானவியல், ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இசை, இலக்கியத்தில் ஈடுபாடும், மதம் சார்ந்த கல்வித் துறைகளிலும் ஈடுபடுவார்கள்.

தொழில்
இவர்களுக்கு உத்தியோகம், தொழில் இரண்டுமே சிறப்பாக அமையும். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுதந்திரமாக விளங்குவார்கள். இவர்களுக்கு சாதகமான தொழில்கள் மருத்துவம், மர்ம நாவல்கள் எழுத்தாளர், போதகர், ஜோதிடர், யோகா பயிற்சியாளர், அரசியல், ஆயுதம் தயாரித்தல், வெல்டிங், இரும்பு மற்றும் தங்கம் தொடர்பான வேலைகள், மருந்து நிறுவன வேலைகள் ஆகியவற்றில் சாதிப்பார்கள். 27 வயது முதல் பல வகையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

குடும்பம்
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குடும்ப அக்கறை இல்லாதவர்களாக இருப்பார்கள். குடும்பத்தைப் பொருத்தவரை தாமரை இலை தண்ணீர் போல் தான் செயல்படுவார்கள். வாழ்க்கையில் சற்று பற்றுதல் குறைவாக இருக்கும். பிள்ளைகள் மீது அதிக பாசம் இருக்கும். பெற்றோர்களுக்கு ஏற்ற மகனாகவும், சகோதர சகோதரிகளுக்கு ஏற்றவர்களாகவும் திகழ்வார்கள். யாருடைய சொத்துக்கும் ஆசைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு அமையும் மனைவி புத்திசாலியாகவும், கடமை உணர்வு உள்ளவராகவும் விளங்குவார்கள்.

ஆரோக்கியம்
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் என்பதால் எளிதில் நோய்கள் இவர்களை அண்டாது. வந்தாலும் கூட சிறிய சிறிய பிரச்னைகள் தான் வரும். அவைகளும் உடனே சரியாகவிடும்.

பூரட்டாதி நட்சத்திர குணங்கள்
பூரட்டாதி நட்சத்திரன் அதிபதி குரு பகவான் ஆவார். முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும், நான்காவது பாதம் மீன ராசியிலும் இடம் பெறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். விமர்சனத்திக்குள்ளாவார்கள். இவர்களும் மற்றவர்களை விமர்சிப்பார்கள். தங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அதை சகித்துக் கொள்ளமாட்டார்கள்.

பொதுவான குணங்கள்
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வார்கள். எதையும் நிதானமாக கையாளும் முதிர்ச்சி பெற்றவர்கள். எல்லாம் தெரிந்திருந்தும் வெளியே அலட்டிக் கொள்ளமாட்டார்கள். நான் பிடித்து முயலுக்கு மூன்று கால் என்று வாதிடாமல் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்கள் நலனில் அக்கறை கொள்வார்கள். சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள்.

குடும்பப் பற்று குறைவு தான். ஆன்மீகம், துறவறம், தத்துவம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்கள். காலத்துக்கேற்ப மாற இயலாதவர்கள். தான் கொண்ட கொள்கையில் இருந்து மாறமாட்டார்கள். எதையும் சிந்தித்து செயல்படுவார்கள். இவர்களில் சில பேர் சித்தர்களாகவும், மகான்களாகவும் இருப்பார்கள்.

கல்வியாளர், அறிவியல் அறிஞர், பேராசிரியர், ஆசிரியர் ஆகிய பணிகளில் இருப்பார்கள். சிலர் கல்லூரி, பயிற்சி நிறுவனங்கள் நடத்துபவராகவும் இருப்பார்கள். சிறு வயதிலேயே மிகப்பெரிய அனுபவங்களையும், கசப்பான உணர்வுகளையும் சந்திப்பார்கள். எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். யாரையும் தொந்தரவு செய்யாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வார்கள்.

பூரட்டாதி முதல் பாதம்
முதல் பாதத்தை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி நிறைந்தவர்கள். வலிமையானவர்களாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள். குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.

பூரட்டாதி இரண்டாம் பாதம்
இதன் அதிபதி சுக்கிர பகவான். வசீகரத் தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். எந்தச் சூழலிலும் பொய் பேச மாட்டார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எடுத்த காரியத்தை முடிக்க எல்லா முயற்சிகளிலும் இறங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அனைவராலும் விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பூரட்டாதி மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்பவர் புதன் பகவான். இதில் பிறந்தவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார்கள். தர்மத்தின் வழியில் நடப்பவர்கள். கற்பனை சக்தி நிறைந்திருக்கும். உணவுப்பிரியர்களாக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் நாட்டம் உடையவர்கள்.

பூரட்டாதி நான்காம் பாதம்
சந்திர பகவான் இந்த பாதத்தை ஆட்சி செய்கிறார். உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையே பேசுவார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக விளங்குவார்கள். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தொழில்முனைவோராக இருப்பார்கள், தொழிலில் நாட்டம் கொண்டவராகவும் திகழ்வார்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா, திருக்காட்டுப்பள்ளி, ரங்கநாதபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருவானேஷ்வரர் திருக்கோயில். தாயார் காமாட்சி அம்மன். பூரட்டாதி ராசிக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இசைத்துறையில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *