பூசம் நட்சத்திரம் – pusam natchaththiram

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வைக் காணும் வரை ஓயமாட்டார்கள். நேர்மையான, நியாயமான குணத்தை படைத்தவர்களாக இருப்பார்கள். இரக்க குணமும், கருணையுள்ளமும், தயாள குணத்தையும் பெற்றிருப்பார்கள். பாராட்டுகளுக்கு மயங்குவதால், இவர்களிடம் இனிமையாகப் பேசி எந்த காரியத்தையும் சாதித்துவிடலாம். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள். தயவு தாட்சண்யம் பார்ப்பதிலும், மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே. எல்லா விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். தன்னம்பிக்கையாலும், தளராத தைரியத்தாலும் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள்.


கல்வி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்கள் என்பதால் கதை, கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

தொழில்

இளமை வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்கள். சினிமாத் துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பல வகையில் புகழ் பெறும் வாய்ப்புள்ளது. இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடலில் எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவார்கள்.


குடும்பம்

காதல் தோல்வி கண்டவராக இருந்தாலும் வாழ்க்கைத் துணையிடம் பிரியமாக நடந்து கொள்வார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் கூட அது தன்னால் நடந்தது என பெருமைபட்டுக் கொள்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். உற்றார் உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல் தக்க சமயத்தில் அவர்களுக்கு உதவுவார்கள். குடும்பத் தலைவன் என்ற பொறுப்பை ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை அளிப்பார்கள்.


ஆரோக்கியம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காச நோய், ரத்த சோகை, மார்பக புற்று நோய், தோல் வியாதி, மஞ்சள் காமாலை, விக்கல், இருமல் போன்றவற்றால் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம்.

பூசம் நட்சத்திர குணங்கள்
நவக்கிரகங்களில் நீதிமான் என்று சொல்லப்படுகிற சனீஸ்வர பகவான் அதிபதியாக ஆட்சி செய்யும் நட்சத்திரம் பூசம். சிறப்பு வாய்ந்த நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. பூசம் நட்சத்திரத்தின் ராசி கடகம். ராசி அதிபதி சந்திரன்.

பொதுவான குணங்கள்

நீதி, நேர்மை, நியாயம் இவைகளை கண்களாக பாவித்து வழிநடப்பவர்கள் பூசம் நட்சத்திரக்காரர்கள். மன உறுதியும், உடல் உறுதியையும் இயல்பாகவே பெற்றவர்கள். எந்த நெருக்கடியை சமார்த்தியமாக சமாளிப்பார்கள். எப்படிப்பட்ட சவாலான பணிகளையும் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தயவு தாட்சண்யமும், மனசாட்சிக்கு பயந்து நடக்கும் சுபாவம் கொண்டவர்கள். பிறரைக் கவரும் வசீகரத் தோற்றத்தை பெற்றிருப்பார்கள்.

பசியை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். விருந்தோம்பல் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. பிறருக்கு பகிர்ந்துளித்து உண்ணும் பண்பைப் பெற்றவர்கள். நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆன்மீக வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் துறந்துவிடும் சித்தத்தைப் பெற்றிருப்பார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பினால் முன்னேறி வாழ்வின் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.

பொறுமையை கடைப்பிடித்தாலும் சில சமயங்களில் கோபம் வந்துவிடும். ஒரு போதும் சுயமரியாதையை விட்டுத்தரமாட்டார்கள். எந்த காரியத்தையும் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெறும் குணம் கொண்டவர்கள். செய்நன்றி மறவாதவர்கள். பழமையை விரும்புவார்கள், அதே சமயம் புதுமையையும் வரவேற்பார்கள். வாழ்வின் எந்த உயர் நிலைக்கு சென்றாலும் தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். கடின உழைப்பினால் செல்வாக்குமிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள். திரைப்படத்துறை, இரும்பு ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் துறை, பெட்ரோல், டீசல், எண்ணெய் போன்ற துறைகளில் கோலோச்சுவார்கள்.

தங்களுக்கு அமைகின்ற வாழ்க்கைத் துணையிடம் அன்பைப் பொழிவார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விரும்புகிறவர்கள். சின்னச் சின்ன சபலங்கள் தோன்றினாலும் ஒரு போதும் தீய வழிகளில் ஈடுபடமாட்டார்கள். வசதியான வீடு, வாகனம் போன்றவற்றை பெறும் யோகம் கொண்டவர்கள்.

பூசம் ஒன்றாம் பாதம்
சூரிய பகவான் ஒன்றாம் பாதத்தை ஆள்கிறார்.
இயல்பாகவே சுறுசுறுப்பானவர்கள். நோய் நொடிகள் எளிதில் அண்டாது. தந்தையுடன் முரண்பாடுகள் ஏற்படும். பிறரிடம் திறமையாக வேலை வாங்கும் தலைமைப் பண்பைப் பெற்றிருப்பார்கள். தவறான காரியங்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உஷ்ணம் சம்பந்தமான நோய்களில் அவதியுறுவார்கள். தீர்க்க ஆயுளைப் பெற்றவர்கள்.

பூசம் இரண்டாம் பாதம்
இரண்டாவது பாதத்தை புதன் பகவான் ஆள்கிறார்.
பெற்றோர்களை மதித்து நடப்பார்கள். சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம். எவரிடமும் நட்போடு பழகுவார்கள். சில சமயங்களில் எதையாவது நினைத்து கவலை அடைவார்கள். பிறர் தீங்கிழைத்தாலும் நன்மை செய்யும் குணம் கொண்டவர்கள். ஒரு காரியத்தில் ஏற்படும் தடங்கல்கள், பிரச்னைகள் எதுவாயினும் பொறுமையோடு கையாண்டு திறம் செய்து முடிப்பார்கள். குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாக உழைத்து செல்வம் ஈட்டுவார்கள். புத்தகப் பிரியர்களாக இருப்பார்கள்.

பூசம் மூன்றாம் பாதம்
சுக்கிர பகவான் மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்கிறார்.
வாழ்க்கையில் எந்தவிதமான சோதனைகள் வந்தாலும் திறமையால் கையாண்டு வெற்றி பெறுவார்கள். எப்போதும் இளமைத் தோற்றத்துடன் வலம் வருவார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விரும்புகிறவர்கள். இயற்கை விரும்பிகள். தான, தர்மங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். வாகன விரும்பிகளாக இருப்பார்கள். தங்களது வாகனங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். பிறரிடத்தில் அன்பு காட்டுவார்கள்.

பூசம் நான்காம் பாதம்
அங்காரகன் எனும் செவ்வாய் பகவான் நான்காம் பாதத்தை ஆள்கிறார்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற கொள்கையை உடையவர்கள். வீரம் நிறைந்தவர்கள். பேச்சுத் திறனால் அனைத்து காரியங்களையும் சுலபமாக சாதித்துக் கொள்வார்கள். சுயமரியாதையும், தன்மானமும் கொண்டவர்கள். மன உறுதி இருந்தாலும் தேவையில்லாதவற்றை யோசித்து கவலை கொள்வார்கள். முன்கோபத்தால் பிறரை வருத்திவிட்டு பின்பு வருத்தம் கொள்வார்கள். எப்போது இளமையாகத் தெரிய வேண்டும் என்று எண்ணுபவர்கள். அதற்கான ஒப்பனைகளையும் செய்து கொள்வார்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா, விளங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில். தாயார் அபிவிருத்தி நாயகி. தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அகல பூசம் நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுற்றவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறந்த பலன்களைப் பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *