புனர்பூசம் நட்சத்திரம் – punarpusam natchaththiram

புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் எல்லோருடனும் நட்புடன் பழகும் குணமும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். நன்றி மறக்காதவர்களாக இருப்பார்கள். இவர்களது ஒளிவு மறைவற்ற வெளிப்படையான குணம் மற்றவர்களிடையே நன்மதிப்பையும், மரியாதையும் பெற்றுத் தரும். சாதுவான குணமும், கருணை மற்றும் அன்பான செயல்களால் தோற்றப் பொலிவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். பழமையான விஷயங்களில் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத குணமும் தன்மானமிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரை பார்த்தவுடனேயே அவர்களை எடை போட்டு விடுவார்கள். எந்த காரியத்திலும் அனுபவ அறிவைக் கொண்டு செயலாற்றுவார்கள். மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள்.

கல்வி

ஏட்டறிவு, எழுத்தறிவு இவற்றைக் காட்டிலும் நிறைந்த அனுபவ அறிவைப் பெற்றிருப்பார்கள். அரசுப் பணியை விட தனியார் துறைகளில் அதிகம் பணியாற்றுவார்கள். ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், மருத்துவம் போன்ற துறைகளில் ஈடுபட்டு புகழடைவார்கள்.

தொழில்

எந்த வேலையையும் தெரியாது என்று சொல்லமாட்டார்கள். அதை எளிதில் கற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். யாருக்கும் அஞ்சாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு பலரை வழிநடத்தும் ஆற்றல்மிக்கவர்கள். கமிஷன், ஏஜென்சி, காண்டிராக்ட், பைனான்ஸ் போன்ற துறைகளிலும், வங்கி, வர்த்தகத்துறை, நீதித்துறை, மதம் சார்ந்த கல்வித்துறை போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக இருக்க விரும்பமாட்டார்கள். உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.

குடும்பம்

காதலிக்கும் அமைப்பு இருந்தாலும் கூட பெற்றோர்களுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் தங்களது காதலைத் தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். சிக்கனக் குணத்தைக் கொண்வடர்களானாலும் மனைவி, பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு செலவு செய்ய தயங்கமாட்டார்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வார்கள்.

ஆரோக்கியம்

சிலருக்கு சிறு வயதிலேயே முடக்குவாதங்கள் ஏற்படக் கூடிய நிலை வரலாம். நுரையீரல் பாதிப்புகளும் வரலாம். அதிகமான இனிப்பு வகைகளை அடிக்கடி உண்பதால் சர்க்கரை நோய் தாக்கும் அபயாம் ஏற்படலாம்.

புனர்பூசம் நட்சத்திர குணங்கள்
நட்சத்திரங்கள் வரிசையில் 7வது இடத்தில் அமைந்துள்ள புனர்பூசம் நட்சத்திரம். விஷ்ணு பகவான் ராமனாக அவதரித்தது இந்த நட்சத்திரத்தில் தான் என்பது கூடுதல் சிறப்பு. இதன் அதிபதி குரு பகவானாவார். 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4ம் பாதம் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது.

பொதுவான குணங்கள்

நேர்மையும், ஒழுக்கமும் கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள். பொய் பேசுவது இவர்களுக்கு பிடிக்காது. உண்மையை உரைப்பதால் தனக்கு எந்த பலனும் இல்லை என்றாலும் கூட உண்மையைத் தான் பேசுவார்கள். எந்த காரியத்தையும் அன்பால் சாதிக்க எண்ணுபவர்கள். சிக்கனத்தை கடைப்பிடிப்பார்கள். எப்போதும் பேச்சில் சாதுரியம் நிறைந்திருக்கும். பால், நெய், தயிர் போன்ற பால் தொடர்பான உணவுப் பொருட்களை விரும்பி சாப்பிடுவார்கள்.

சட்டத்திட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும், ஒரு சிலர் ஆன்மீக குருவாகவும் இருப்பார்கள். கோபாமானாலும் சரி, அன்பானாலும் சரி உடனே வெளிப்படுத்திவிடுவார்கள். தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்கள். தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் பங்கம் வந்தால் பொங்கி எழுவார்கள்.

பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் காரியத்தை ஒரு போதும் செய்யமாட்டார்கள். இலவசங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்கள். முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள். அன்னதானம் வழங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பேச்சுத் திறமையால் காரியங்களை சுலபமாக சாதித்துக் கொள்வார்கள். ஒருத்தரைப் பார்த்தவுடனேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை யூகித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்.

நேர்மையும், ஒழுக்கத்தையும் கொண்டவர்கள் என்பதால் எதற்கும் அஞ்சமாட்டார்கள். தங்களது குடும்பத்தினரின் தேவைகளை அவர்கள் கூறாமலேயே யூகித்து செயல்படுவார்கள். குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு எந்தத் தியாகத்தையும் செய்வார்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். காதல் வசப்பட்டாலும் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்காக காதலை தியாகம் செய்யத் தயங்கமாட்டார்கள்.

கல்வியறிவை விட தங்களது அனுபவ அறிவைக் கொண்டே பல சாதனைகளை புரிவார்கள். புனர்பூசம் ராசிக்காரர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். பெண் குழந்தைகள் என்றால் இவர்களுக்கு கொள்ளைப் பிரியம். பெண் தெய்வங்களையே அதிகம் விரும்பி வழிபடுவார்கள். அரசுப் பணிகளை விட தனியார் துறைகளில் அதிகம் வேலை செய்கிறவர்களாக இருக்கிறார்கள் புனர்பூச நட்சத்திரக்காரர்கள்.

புனர்பூசம் ஒன்றாம் பாதம்
அங்காரகன் எனும் செவ்வாய் பகவான் முதல் பாதத்தை ஆட்சி செய்கிறார். கூட்டுக் குடும்பமாக வாழ விரும்புவார்கள். தாயார் மீது அதிக பாசம் இருக்கும். ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றுவதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் ஆதிக்கம் செலுத்துவார்கள். தந்தை வழி உறவுகள் மூலமாக தக்க சமயங்களில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை காப்பாற்றுவதில் முனைப்புக் காட்டுவார்கள். மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் சாதனைகள் புரிந்து பிரபலமடைவார்கள்.

புனர்பூசம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார்.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். மற்றவர்களிடம் அன்புடன் பழகும் சுபாவம் கொண்டவர்கள். எதிரியைக் கூட கண்ணியமாக நடத்துவார்கள். சொகுசு வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்கள். பல்வேறு வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். குடும்பத்தை மிகவும் நேசிப்பார்கள். இந்த பாதத்தில் பிறந்த புனர்பூசம் ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் அதிர்ஷ்டங்கள் வாயிலாக வாழ்வில் திருப்புமுனைகள் அமைகின்றன.

புனர்பூசம் மூன்றாம் பாதம்
புதன் பகவான் மூன்றாம் பாதத்தை ஆள்கிறார். செயல் வீரர்களாக இருப்பார்கள். எப்போதும் ஒரு தேடல் இருந்து கொண்டேயிருக்கும் இவர்களிடம். கதை, கவிதை எழுதுவதில் திறமை இருக்கும். எந்த விஷயத்தை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வார்கள். அனுபவ அறிவு நன்றாக கை கொடுக்கும். சிறந்த ஆலோசகர்களாகவும், மற்றவர்களுக்கு தாமாக முன்வந்து உதவுபவர்களாகவும் விளங்குவார்கள். பணியின் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். சுயநலவாதிகளை இவர்கள் விரும்பமாட்டார்கள். போதும் என்ற மனமில்லாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார்கள். இயற்கையை நேசிப்பவர்கள்.

புனர்பூசம் நான்காம் பாதம்
நான்காம் பாதம் கடக ராசியில் வருவதால் இதை மனோகாரகனான சந்திரன் பகவான் ஆள்கிறார்.
கற்பனை வளம் கொண்டவர்களாக இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டில் ஆர்வமும், பல புனித பயணங்களையும் மேற்கொள்வார்கள். மழலையைப் போன்ற மனம் படைத்தவர்கள். யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள். மற்றவர்களை கவரும் முகத்தோற்றத்தையும், உடல் பொலிவையும் பெற்றிருப்பார்கள். தான, தர்மங்களில் விருப்பம் கொண்டவர்கள். கடின உழைப்பின் வாயிலாக செல்வங்களை சேர்ப்பார்கள். பிறரை மதித்து நடப்பார்கள். வெளிநாடுகளுக்கு சென்று செல்வங்களை திரட்டி குடும்பத்திற்கு அனுப்புவார்கள்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்துள்ளது அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில். தாயார் பெரிய நாயகி, பிரகன் நாயகி. புனர்பூசம் ராசிக்காரர்கள் தங்களுக்கான தோஷங்கள் அகல இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *