
பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்குவதால் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும், பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தனக்கென இல்லாமல் பிறருக்கு தானம் செய்து வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள். நடனம், பாட்டு, இசை இவற்றில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர்மையான முறையிலேயே எதிர்கொள்வார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டர்கள். தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். அதீத தன்னம்பிக்கையும், பெரியவர்களுக்கு மரியாதை தருபவர்களாகவும் விளங்குவார்கள். வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள். பார்ப்பதற்கு சாதுவாக காணப்பட்டாலும் சமார்த்தியசாலிகளாக இருப்பார்கள். எதையும் சிந்தித்து செயலாற்றுவார்கள்.
கல்வி
கல்வியில் மிகுந்த திறமைசாலியாக இருப்பார்கள். ஆசிரியர்கள் அல்லது மற்றவர்கள் கூறுவதை அப்படியே கேட்காமல் தானாக ஆராய்ந்து, அறிவால் சிந்தித்து தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதையே பின்பற்றுவார்கள். மதிப்பெண்களைப் பொறுத்தவரை சராசரி மாணவர்களாகத் திகழ்வார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாதலால் தன்னைச் சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள்.
தொழில்
எந்த ஒரு காரியத்திலும் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ்வார்கள். மிகுந்த நஷ்டத்தோடு இயங்கக் கூடிய தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை லாபகரமானதாக மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். வணிகவியல், பல், கண், காது ஆகிய துறைகளிலும், வணிக மேலாண்மை, நிதித்துறை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் வேலை என்று இறங்கிவிட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.
மாடலிங், பேஷன் டிசைன், வீடியோ எடிட்டிங், புகைப்படம் எடுத்தல், நிர்வாகப் பணி, விவசாயம், விளம்பரம், மோட்டார் வாகனம், ஹோட்டல், சட்டம் போன்ற துறைகளில் சாதிப்பார்கள்.
குடும்பம்
மனைவி, பிள்ளைகளையும், தாய், தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்துக் கொண்டிருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன், சமைத்தவர்களை பாராட்டவும் தவறமாட்டார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சுக வாழ்வுக்கும், சொகுசு வாழ்வுக்கும் பஞ்சமிருக்காது.
ஆரோக்கியம்
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகப் பெரியதாக எந்தவொரு உடல்நலக் குறைவும் ஏற்படாது. பொதுவாக இவர்களுக்கு ஆயுள் அதிகமாக அமைந்திருக்கும். ஆனால் பிற்காலங்களில் பல் பிரச்சனை, நீரிழிவு, உடல்வலி மற்றும் மலேரியா போன்ற நோய்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கலாம்.
பரணி நட்சத்திர குணங்கள்
சுகபோகங்களுக்கும், கலைக்கும் உரிய கிரகமான சுக்ரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் பரணி நட்சத்திரக்காரர்கள். இவர்களின் ராசி நாதன் செவ்வாய். பிறரைக் கவர்கின்ற அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். எந்த காரியத்திலும் தனித்தன்மையோடு செயல்படும் எண்ணம் கொண்டவர்கள். தான் கஷ்டப்படுகின்ற சூழ்நிலையிலும் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்ய நினைப்பவர்கள். பிறருக்கு ஆறுதல் கூறியும், முடிந்த உதவிகளை செய்யும் மனிதநேயம் கொண்டவர்கள்.
பொதுவான குணங்கள்
அபாரமான மனோ தைரியம் நிறைந்தவர்களாகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவர்களாகவும் விளங்குவார்கள். சாஸ்திரங்களைப் பற்றி பிறருக்கு சொல்லும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகரமாக முடித்து வைப்பார்கள். சுக போக வாழ்க்கையை வாழ்பவர்கள். அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆளுமைத் திறன் உடையவர்களாக விளங்குவார்கள்.
ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறந்து விடுகிற வித்தை தெரிந்தவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் சமார்த்தியமாக கையாள்வார்கள். இசை, நடனம், நாட்டியம், ஓவியம், இயற்கை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள். விலையுயர்ந்த ஆடைகளை அணிபவர்களாகவும், வாசனைத் திரவியங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றாமல் தனது ஆறாவது அறிவால் சிந்தித்து தனக்கு எது சரி என்று படுகிறதோ அதையே பின்பற்றுவார்கள். படிப்பில் திறமைசாலிகளாக விளங்குவார்கள். சுவைகளில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு பிடிக்கும். ஏதோ பசிக்காக சாப்பிட்டோம் என்றில்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ருசியாக சமைப்பவர்களை பாராட்டும் குணம் கொண்டவர்கள்.
அதீதமான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அதுவே சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். வணிகவியல், பல், கண், காது ஆகிய மருத்தவத்துறைகள், வணிக மேலாண்மை, நிதித்துறை ஆகியவற்றில் ஜொலிப்பார்கள். சிறந்த நகைச்சுவை உணர்வை கொண்டிருப்பதால் அருகில் இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள். சோகமாக இருப்பவர்கள் கூட பரணி நட்சத்திரக்காரர்களிடம் பேசினால் டானிக் சாப்பிட்டது போல் புத்துணர்ச்சி அடைவார்கள். பயணங்களை விரும்புபவர்கள்.
உடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவார்கள். மூடக்கூடிய சூழ்நிலையில் உள்ள எந்த நிறுவனமாக இருந்தாலும், பொறுப்பேற்றுக் கொண்டு திறம்பட மீட்கும் வல்லமை கொண்டவர்கள். சமயோசித புத்தியால் பல காரியங்களை சாதிப்பவர்கள். காதல் மிகவும் பிடிக்கும். சொந்த வீடு, வாகன வசதி சுலபமாக அமையும். நீண்ட ஆயுள் பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பரணி ஒன்றாம் பாதம்
பரணி நட்சத்திரத்தில் ஒன்றாம் பாதம் சூரியனின் அம்சம் நிறைந்ததாகும். தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நல்ல பேச்சுத் திறமை உள்ளவர்கள். அழகு, சுகபோகத்தில் விருப்பம் உள்ளவர்கள். சமார்த்திய குணத்தால் எதையும் தனதாக்கிக் கொள்வார்கள். கோபம், பொறுமையில்லாத குணம் கொண்டவர்கள்.
பரணி இரண்டாம் பாதம்
இது புதன் அம்சம் பெற்றது. ஆடை, அணிகலன்களில் அதிக ஆசை கொண்டவர்கள். குடும்பப் பற்று மிகுந்திருக்கும். இசையில் நாட்டம் உண்டு. எதிலும் திருப்தியடைய மாட்டார்கள்.
பரணி மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதம் சுக்கிரன் அம்சம் பொருந்தியது. புத்திக்கூர்மையோடு செயல்படுவார்கள். உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டோடும். எதிலும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிறரை எளிதில் நம்பமாட்டார்கள்.
பரணி நான்காம் பாதம்
செவ்வாயின் அம்சம் பொருந்தியது நான்காம் பாதம். தலைமைப் பண்பு மிகுந்திருக்கும். அலங்காரத்திலும், ஆடம்பரத்திலும் விருப்பம் கொண்டவர்கள். சிந்தனையில் சலனம் இருக்கும். சுயமாக முடிவெடுக்க முடியாமல் தயக்கம் கொள்வார்கள். பொறாமை, நன்றியின்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லாடையில் அமைந்துள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில். தாயார் சுந்தரநாயகி. பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு இறைவனை வழிபடுகின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.