
திருவோண நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் என்பதால் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். தனக்கென தனிக்கொள்கையுடன் வாழ்வார்கள். சுத்தத்திற்கும், தூய்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். சுத்தமில்லாதவர்களை அருகில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். இரக்க குணம் உள்ளவர்கள். பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள். சிறந்த பக்திமானாக விளங்குவார்கள். வாழ்க்கையில் எத்தனை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும் கூட எளிமையாக வாழ்பவர்கள். அடுத்தவர் பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். நடத்தையில் அடக்கமும், நேர்மையும் நிறைந்திருக்கும். அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு புறம்பாக நடந்து கொள்ளமாட்டார்கள். தவறு என்று தெரிந்தால் அதை உடனே சுட்டிக்காட்டத் தயங்கமாட்டார்கள். நல்ல நீதிமான்களாகத் திகழ்வார்கள். நவீன ரக ஆடைகளை அணிவதிலும், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டாலும் கூட உடனடியாக சாந்தமடைவார்கள். வாய்மையே வெல்லும் என்ற தாரக மந்திரத்தை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். பொறுமையும், சுயமரியாதையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
கல்வி
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிலர் அதிக கல்வி கற்காவிட்டாலும் பன்முகத் திறன் கொண்டவர்களாக திகழ்வார்கள். ஆசிரியர் பணி, போதித்தல், பயிற்சியாளர், ஆராய்ச்சி, மொழி பெயர்ப்பு, கதை சொல்பவர், இசை தொடர்பான பணிகளில் சாதிப்பார்கள்.
தொழில்
வேலை மற்றும் தொழில் இரண்டுமே வெற்றிகரமாக அமையப் பெற்றவர்கள். இரண்டிலுமே வெற்றி காண்பார்கள். இவர்களுக்கு சாதகமான தொழில்கள் மெக்கானிக்கல் அல்லது டெக்னிக்கல் வேலைகள், பொறியியல், பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் தொடர்பான தொழில், ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் போன்ற துறைகளில் வருமானம் ஈட்டலாம். பெரியளவில் முதலீடுகள் செய்து புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்கி மிகப்பெரிய அளவில் தொழில் செய்வார்கள். 24 வயதிலிருந்தே நல்ல மாற்றங்களும், வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்.
பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி, அகழ்வராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் ஜொலிப்பார்கள்.
குடும்பம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களால் மதிக்கப்படுபவர்களாகத் திகழ்வார்கள். மனைவி மீதும், தாயின் மீதும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். சில நேரம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதால் சின்னச் சின்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். ஆடை, ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். பிள்ளைகள் மீது அதிக அன்பும், பாசமும் வைத்திருப்பார்கள். உறவினர்களையும் நேசிப்பார்கள். குடும்பத்தினர் ஆதரவோடு சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.
ஆரோக்கியம்
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு அடிக்கடி நீர் தொடர்பான உபாதைகள் ஏற்படும். மனக்குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும். சிலருக்கு பரம்பரை வியாதியான சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.
திருவோணம் நட்சத்திர குணங்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம். திருமால் அவதரித்த நட்சத்திரம் இது. வாமன அவதாரத்துக்கு காரணமான மகாபலியைப் போற்றும் வகையில் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதுவும் இந்த நட்சத்திரத்தின் சிறப்பு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நீதிமான்களாக விளங்குவார்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள். சிக்கனத்தைக் கடைப்பிடித்தாலும் தன்னை சார்ந்தவர்களுக்கு வாரி வழங்குவார்கள்.
பொதுவான குணங்கள்
மனிதநேய குணம் கொண்டவர்கள். கோபம் கொள்வார்கள், ஆனால் உடனே சாந்தமடைந்து விடுவார்கள். எதிரிகளுக்கும் உதவுகின்ற பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். எந்த வெளிநாடுகளுக்கு சென்றாலும் தங்களது கலாச்சாரத்தை மறக்க மாட்டார்கள். தான் கொண்ட லட்சியத்தில் எத்தனை சோதனைகள் வந்தாலும் பின்வாங்க மாட்டார்கள். பழி, பாவங்களுக்கு அஞ்சுவார்கள்.
எங்கு வாழ்ந்தாலும் அங்கு புகழ் அடைவார்கள். உழைக்கத் தயங்காதவர்கள். கடின உழைப்பின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள். பெரியளவில் முதலீடுகள் செய்து பிரம்மாண்டமாகத் தொழில் நடத்துவார்கள். தெய்வ பலமுடையவர்கள். கலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
நல்ல சம்பாத்தியத்தில் வசதியான வேலையில் இருப்பார்கள். பெரிய அந்தஸ்தோடு வாழ்வார்கள். பயணப் பிரியர்களாக இருப்பார்கள். மனைவிக்கு பயந்து நடப்பவராக இருப்பார்கள். மனிதாபிமானம் உள்ளவராகவும், பொய் சொல்லத் தெரியாதவராகவும் இருப்பார்கள்.
திருவோணம் முதல் பாதம்
திருவோணம் முதல் பாதத்தில் அதிபதி செவ்வாய் பகவான். கர்வம் கொண்டவர்கள். கல்வியில் அதிக நாட்டம் இருக்கும். தைரியசாலிகளாக இருப்பார்கள். உடல் பலகீனமானவர்கள். அடிக்கடி நோய்கள் ஏற்படும். சொத்து சேர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள்.
திருவோணம் இரண்டாம் பாதம்
திருவோணம் இரண்டாம் பாதத்தை ஆட்சி செய்பவர் சுக்கிரன் பகவான். சுகபோகங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள். பெரியோர்களை மதிக்கக் கூடியவர்கள். ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். எளிதில் யாரையும் நம்பமாட்டார்கள். தலைமைப் பண்பு உள்ளவர்கள். ஆசைகள் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
திருவோணம் மூன்றாம் பாதம்
திருவோணம் மூன்றாம் பாதத்தை புதன் ஆட்சி செய்கிறார். நல்ல ஞானம் உடையவர்களாகவும், சிறந்த பக்தி உடையவர்களாகவும் இருப்பார்கள். தர்ம சிந்தனை உள்ளவர்கள். கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள். கோபமும், குணமும் ஒருங்கே அமைந்திருக்கும். சமூக சேவைகளில் ஆர்வம் உள்ளவர்கள்.
திருவோணம் நான்காம் பாதம்
திருவோணம் நான்காம் பாதத்தை சந்திரன் ஆட்சி செய்கிறார். அனைத்து சௌபாக்கியமும் பெற்று வாழ்பவர்கள். குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்கள். செல்வ வளம் உடையவர்கள். நியாயத்தைப் பேசுவார்கள். கோபம் கொண்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள்.
திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
வேலூர் மாவட்டம், வாலஜாபேட்டை தாலுக்கா, காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில். தாயார் அலர்மேல் மங்கை. தங்களது தோஷங்கள் நீங்க வேண்டி திருவேணாம் நட்சத்திரக்கார்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடியோ தொழில் செய்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அடிக்கடி வந்து வழிபட்டு பலனடைகிறார்கள்.