
சதயம் நட்சத்திரக்காரர்கள் உழைத்து வாழ வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தைக் கொண்டவர்கள். ராகு பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி என்பதால் உடல் வலிமைமிக்கவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாளியாகவும், நேர்மையான வழியில் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் சரிசமமாக பழகுவார்கள். இளகிய மனமும், இறைவன் மீது ஆழ்ந்த பக்தியையும் கொண்டவர்கள். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். எந்த வேலையையும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் புத்திக்கூர்மையால் சாதுர்யமாக சாதித்துவிடுவார்கள். எந்தப் பிரச்னை வந்தாலும், அதை துணிந்து எதிர்கொண்டு வெற்றிவாகை சூடுவார்கள். கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பார்கள். பிறர் சொத்துக்களுக்கு ஆசைப்படமாட்டார்கள். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வார்கள். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் சரி, அவசரப்படாமல் அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பார்கள். கேளிக்கை போன்ற விஷயங்களில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கல்வி
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வி கற்கும் யோகம் பெற்றவர்கள். அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சைக்காலஜி, டச் தெரபி, மருத்துவத்தில் ஜொலிப்பார்கள். அபாரமான ஞாபக சக்தியைப் பெற்றிருப்பார்கள். இலக்கியத்தின் மீது சிறந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
தொழில்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது சுய சிந்தனையுடன் தான் செயல்படுவார்கள். கற்றவர்களின் வழிகாட்டுதல் படியும் நடந்து கொள்வார்கள். வெளிநாடுகளுக்கு சென்று லாபம் சம்பாதிக்கும் யோகத்தைப் பெற்றவர்கள். பைலட், தொழிலதிபர்கள், தொழில் சங்கத் தலைவர்களாக இருப்பார்கள். ஸ்டீல் கார் தொழிற்சாலை, சாயப்பட்டறை, பனியன் கம்பெனி, விமான நிலையம் கட்டுவது, கடலுக்குள் பாலம் கட்டுவது போன்ற துறைகளில் சாதனை படைப்பார்கள். கனரக வாகனங்களை விற்பது, அனல்மின் நிலையம் கட்டுவது, மேம்பாலம் போடுவது, சாலை அமைப்பது போன்ற பணிகளில் திறமையாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள்.
குடும்பம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி, பிள்ளைகளிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் அளிப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும், உற்றார் உறவினர்களுக்காகவும் எதையும் தியாகம் செய்வார்கள். 18 வயது வரை வாழ்வில் பல பிரச்னைகளை சந்தித்தாலும் படிப்படியாக முன்னேறி வாழ்வின் உச்சியை அடைவார்கள். சமுதாயத்தில் ஒரு முக்கிய மனிதராக இருப்பார்கள்.
ஆரோக்கியம்
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். இவர்கள் முன் கோபிகளாக இருப்பார்கள். இதன் விளைவாக இதயத் துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் உண்டாகலாம். மாரடைப்பு ஏற்படலாம். தோல் வியாதிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சதயம் நட்சத்திர குணங்கள்
ராகு பகவானின் மூன்றாவது நட்சத்திரம் சதயம். கும்ப ராசியை சேர்ந்தது. ராசி அதிபதி சனி பகவானாவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். வேத, உபநிடதங்களை கற்பதில் ஈடுபாடு கொண்டவர்கள். நேர்மையான வழியில் தான் பொருள் ஈட்டுவார்கள். எல்லோருக்கும் பிரியமானவர்களாக விளங்குவார்கள். ஒழுக்கமில்லாதவர்களை கண்டால் ஓடி விடுவார்கள். வலிமையான உடல் அமைப்பைப் பெற்றவர்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள்.
பொதுவான குணங்கள்
பெண்களுக்கு விருப்பமானவர்களாக இருப்பார்கள். சத்தியத்தின் மீதும், நேர்மையின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். வெளிநாடுகள் செல்லும் யோகம் பெற்றவர்கள். பல திறமைசாலிகளின் நட்பு இவர்களுக்கு கிடைக்கும். எதிரிகளை வெல்வார்கள். மற்றவர் சொத்துக்களுக்கு ஆசைப்படாதவர்களாக இருப்பார்கள்.
மனிதநேயம் உள்ளவர்கள். பாகுபாடுகள் இல்லாமல் அனைவரிடமும் பழகுவார்கள். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். உடன் பிறந்தவர்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள்.
சுயசிந்தனையாளராக இருப்பார்கள். அதே சமயம் கற்றவர்களின் சொல்லையும் கேட்டுக் கொள்வார்கள். சொன்ன சொல் தவறமாட்டார்கள்.
பைலட், கப்பல், தொழில் அதிபர்களாக இருப்பார்கள். பெரும்பாலோர் ஸ்டீல், கார் தொழிற்சாலை, பனியன் கம்பெனி, சாயப்பட்டறை, ஓட்டல்கள் ஆகிய தொழில்கள் ஈடுபட்டிருப்பார்கள். ஆரம்ப காலத்தில் வேலை செய்தாலும் பின்னாளில் சுயதொழில் தொடங்குவார்கள். மனைவிக்கு பயந்தவராகவும், பிள்ளைகளுக்கு சுதந்திரம் தருபவராகவும் இருப்பார்கள்.
சதயம் முதல் பாதம்
முதல் பாதத்தை குரு ஆட்சி செய்கிறார். இதில் பிறந்தவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள். மனோ தைரியத்தைக் கொண்டிருப்பார்கள். தான் என்ன நினைக்கிறார்களோ அதையே தான் செய்வார்கள்.
சதயம் இரண்டாம் பாதம்
இதன் அதிபதி சனி பகவான். சட்டென்று உணர்ச்சிவசப்படுவார்கள். பழிவாங்கும் எண்ணத்தை கொண்டிருப்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
சதயம் மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதத்தையும் சனி பகவானே ஆட்சி செய்கிறார். இதில் பிறந்தவர்கள் நற்குணங்கள் அமையப் பெற்றவர்கள். காரிய சித்தி உடையவர்கள். பசியை தாங்கமாட்டார்கள். எதிலும் விருப்பம் கொள்ளாதவர்கள். சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
சதயம் நான்காம் பாதம்
இதன் அதிபதி குரு பகவான். தான் நினைத்தை சாதிக்கக்கூடியவர்கள். சிறந்த குணங்களைப் பெற்றவர்கள். வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். புகழ் பெறுவார்கள். எதிலும் பொறுமையாக நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.
சதயம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
திருவாரூர் மாவட்டம், திருப்புகலூரில் அமைந்துள்ளது அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில். தாயார் கருந்தார் குழலி, சூளிகாம்பாள். தங்களது தோஷங்கள் நீங்க சதயம் நட்சத்திரக்காரர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர். வாஸ்து பூஜை இத்தலத்தில் விசேஷம். புதிய வீடு கட்டுவதற்கு முன்பு செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து, அதன் பின்னர் எடுத்து செல்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றில் வலி ஏற்படாமல் இருக்க இங்கு வழிபடுகிறார்கள். இங்கு அம்பாளே ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக புராணம் சொல்வதால் இங்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவமடைய செய்வதாக ஐதீகம்