கேட்டை நட்சத்திரம் – kettai natchaththiram

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல நுண்ணறிவையும், பேச்சுத்திறனையும் பெற்றிருப்பார்கள். மற்றவர்களின் மனநிலையை அறிந்து பேசும் திறமைசாலிகளாக இருப்பார்கள். கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். எந்த காரியமானாலும் சுறுசுறுப்பாக உடனே செய்து முடித்துவிடுவார்கள். இவர்களுடைய நட்பு வட்டம் பெரியது. யாரையும் எதிர்பார்க்காமல், யாருடைய துணையும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் முன்னேற்றம் காண்பார்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் பின்னர் விவேகியாக மாறும் குணம் கொண்டவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எதிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார்கள். வேலையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி வெற்றி பெறுவார்கள். தூய்மையான குணமும், நாசூக்கான பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள் என்பதால் மனதில் உள்ளதை யாரிடமும் வெளிப்படுத்தத் தெரியாது. எந்தச் செயலையும் அர்ப்பணிப்போடு செய்து வெற்றி பெறுவார்கள்.

கல்வி

கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிறைய புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வார்கள். தாங்கள் பெற்ற கல்வியை வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தொழில்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் கதாசிரியர்களாகவும், பத்திரிகை நிருபர்களாகவும், மனோதத்துவ நிபுணர்களாகவும், நடிகர், நடிகைகளாகவும், கட்டிட காண்டிராக்டர்களாகவும், அழகுக் கலை நிபுணர்களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை, கம்ப்யூட்டர், எல்.ஐ.சி., அரசு வங்கி, தனியார் நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தையே அமைத்துக் கொள்வார்கள். தொழில் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் காண்பார்கள். நேரத்தை வீணடிக்கமாட்டார்கள். அரசாங்கப் பணி, கப்பல், நீர் போக்குவரத்து, வன பாதுகாப்பு அதிகாரி, ராணுவம், பேரிடர் நிர்வாகம், தொலை தொடர்பு, ஸ்பேஸ் சிஸ்டம் தொடர்பான வேலை, அறுவை சிகிச்சை நிபுணர் போன்ற பணிகளிலும், துறைகளிலும் ஜொலிப்பார்கள்.

குடும்பம்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளரும் யோகம் உடையவர்கள். முன்கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும், இனிமையான புன்னகையையும் கொண்டவர்கள். மனைவி, பிள்ளைகளிடையே அதிக பாசமும், அக்கறையும் வைத்திருப்பார்கள். நிறைய பேருக்கு காதல் திருமணம் நடைபெறும் வாய்ப்பு அமையும். இருப்பதை வைத்து திருப்தியடைவார்கள். பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் நற்குணங்கள் நிறைந்திருக்கும்.

ஆரோக்கியம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே நல்ல ஆரோக்கியத்தைப் பெற்றிருப்பார்கள். என்றாலும் கூட தோள் விலா எலும்புகளில் வலியும், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கேட்டைநட்சத்திர குணங்கள்


நட்சத்திர வரிசையில் 18வது நட்சத்திரமாக வருவது கேட்டை நட்சத்திரம் ஆகும். புதனுக்குரிய நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாக வரும் கேட்டை. விருச்சிக ராசியைச் சார்ந்தது. இதன் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரக்காரர்கள் மன தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னாடி நிற்பவர்கள். இயல்பாகவே சிறந்த குணங்களைப் பெற்றிருப்பார்கள். ஆனால் முன்கோபியாக இருப்பார்கள். அவசரத்தில் வார்த்தைகளை படபடவென்று கொட்டிவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள். கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள் என்ற பழமொழி உண்டு. கோட்டையை ஆள்கிறார்களோ இல்லையோ கோட்டையில் ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். எப்போதும் முக மலர்ச்சியுடன் காணப்படுவார்கள்.

பொதுவான குணங்கள்

செல்வத்தைச் சேர்ப்பதில் முனைப்பு காட்டுவார்கள். இருந்தாலும் சில சமயங்களில் ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதற்கேற்ப கிடைத்தவற்றைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்கமாட்டார்கள். இனிய சுபாவமும், அழகிய தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். குரு இல்லாமலேயே வில் வித்தையைக் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த முயற்சியிலேயே முன்னேறும் குணம் கொண்டவர்கள்.

தேவேந்திரன் அவதரித்தது இந்த கேட்டை நட்சத்திரத்தில் தான். நுண்ணறிவையும், கல்வியும், பேச்சுத் திறனையும் திறம்பட பெற்றிருப்பார்கள். உறவினர்களால் வஞ்சிக்கப்படுவார்கள். எதிர்காலத்தை உணர்ந்து செயலாற்றுவார்கள். குடும்பத்தினரிடம் பாசத்தைக் காட்டினாலும் கண்டிப்புடனும் நடந்து கொள்வார்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

கேட்டை 1ம் பாதம்
நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – குரு.

உழைப்பதற்கு சளைக்கமாட்டார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். பிரச்னைகளை தைரியமாக எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் வல்லவர்கள். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். நண்பர்கள் பிரச்னைகளை முன்நின்று தீர்த்து வைப்பார்கள். மற்றவர்களிடம் சிறந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள். இதனால் அவர்களது அன்பையும், ஆதரவையும் பெறுவார்கள்.

கேட்டை 2ம் பாதம்
நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – சனி.

ஏழை, எளியோர்க்கு உதவும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். குடும்ப பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயலாற்றுவார்கள். நீதியையும், நேர்மையையும் இரு கண்களாக பாவித்து நடப்பார்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்கள் சொல்வதை கேட்டு முடிவு செய்யாமல் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். விளையாட்டில் இருக்கின்ற ஆர்வம் கல்வியில் இருக்காது. எந்த வேலையையும் சிறப்பாக செய்ய வேண்டு என்ற எண்ணம் கொண்டவர்கள். முன்கோபத்தால் மற்றவர்கள் மனதை அடிக்கடி புண்படுத்திவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பார்கள். எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

கேட்டை 3ம் பாதம்
நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – சனி.

கேட்டையின் மூன்றாம் பாதத்திற்கு நவாம்ச அதிபதியாக விளங்குபவர் கும்ப சனி. எப்போதும் அமைதியாக இருப்பார்கள். பொறுமையோடும், நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள். சண்டை சச்சரவுகளிலிருந்து விலகியிருக்க நினைப்பவர்கள். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்களாக இருப்பார்கள். முதுகில் குத்துபவர்களை கண்டால் ஒதுக்கி விடுவார்கள். மற்றவர்களைப் பற்றி புறம் பேசாமல் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசும் குணம் படைத்தவர்கள். இயற்கை உணவு விரும்பியாக இருப்பார்கள்.

கேட்டை 4ம் பாதம்
நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – குரு.

ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் கறாராகப் பேசுவார்கள். அன்பும், கனிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெற்றோர்களிடம் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்வார்கள். உடன்பிறப்புக்களின் நலனுக்காக பாடுபடுவார்கள். ஆன்மீக அறிஞர்களின் தொடர்பால் மனம் பண்பட்டவர்களாக விளங்குவார்கள். வீடு, வாகனம் என அனைத்து வசதிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்
கேட்டை நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்

விராலிமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்

திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மனை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்

உறையூரில் அருள்பொழியும் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாளை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்


அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில். இது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவிலுள்ள பசுபதி கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. கேட்டை நட்சத்திரக்கார்கள் தங்களது ஜாதக தோஷங்கள் நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *