உத்திராடம் நட்சத்திரம்

உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் உடையவர்களாக இருப்பார்கள். எதிலும் எளிமையை விரும்புவார்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாக, தெளிவாக சிந்தித்து செயலாற்றுவார்கள். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கமாட்டார்கள். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். ஆனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையையும், மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பினையும் கொண்டவர்கள். இவர்களை எளிதில் எடை போட முடியாது. மர்மமான மனிதர்களாக இருப்பார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். ஒருவர் செய்த நன்றியை மறக்கமாட்டார்கள். மற்றவர்களுடைய சொத்துக்களுக்கு ஆசைப்படமாட்டார்கள். உண்மைகளையே பேசுவார்கள். சிறு வயது முதலே குடும்பத்தை சுமக்க வேண்டியிருக்கும். எந்த விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். அதோடு பிடிவாத குணமும் நிறைந்திருக்கும். சிறந்த அறிவாளியாகத் திகழ்வார்கள். யாருக்கும் பயப்படமாட்டார்கள். சமூக நலனுக்காக பாடுபடும் குணம் கொண்டவர்கள்.

கல்வி

கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருப்பார்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியம் போன்ற துறைகளில் ஜொலிப்பார்கள். நாடகத்துறை, நடிப்பு, திரைப்படத் தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். எங்கே தவறு நேர்ந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்கும் குணம் படைத்தவர்கள்.

தொழில்

வக்கீல், நீதிபதி, அரசு பணியாளர், ராணுவம் தொடர்பான பணிகள், மல்யுத்த வீரர், குத்துச்சண்டை வீரர், ஓட்டப்பந்தய வீரர், ஆசிரியர், பாதுகாவலர் பிரிவு, ஆன்மீக உரையாளர், அரசியல்வாதி, தொழிலதிபர், வங்கி போன்ற துறைகளில் சாதிப்பார்கள். இவர்களுக்கு எப்போதும் பொருளாதார ரீதியாக பஞ்சம் இருக்காது.

குடும்பம்

குடும்பத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள். அழகாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். 40 வயது முதல் பொருளாதார ரீதியாக அதிரடி முன்னேற்றம் ஏற்படும். அகங்கார குணம் கொண்டவர் என்பதால் குடும்பத்தில் சில நேரங்களில் குழப்பங்கள் ஏற்படும். தான் செய்கின்ற தவறுகளை மிக சமார்த்தியமாக சமாளித்து விடுவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்கள். அனைவரும் பாராட்டும் விதம் நடந்து கொள்வார்கள்.

ஆரோக்கியம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கண் நோய், பல் நோய், முதுகுத் தண்டில் பிரச்னை, சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் முதுமையில் இளமையான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள்.

உத்திராடம் நட்சத்திர குணங்கள்
சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். நல்ல காரியங்களும், சுபகாரியங்களும் செய்வதற்கு உகந்தது என்பதால் இதை மங்கள் நட்சத்திரம் என்று சொல்வார்கள். முதல் பாதம் தனுசு ராசியிலும், மற்ற பாகங்கள் மகர ராசியிலும் அமைகிறது. தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத்திறன் இருக்கும். ஆனால் மகர ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள்.

பொதுவான குணங்கள்

இந்த ராசியில் பிறந்தவர்கள் அன்பும், இரக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையே பேசுவார்கள். மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வார்கள். எப்போதும் சுறுசுறுப்போடு இளமைத் துடிப்புடன் செயல்படுவார்கள். எங்கு சென்றால் தலைமை ஸ்தானம் இவர்களுக்காக காத்திருக்கும்.

மன உறுதி கொண்டவர்கள். மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். உள்ளதை உள்ளபடி பேசுவதால் சில தருணங்களில் கெட்ட பெயர் ஏற்க நேரிடும். தொழிலாளர்கள் நலனுக்காக போராடும் குணம் கொண்டவர்கள். இவர்களது நடத்தையும், செயலும் மற்றவர்கள் விரும்பும் வண்ணம் அமையும்.

வாழ்க்கைத் துணையிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். எந்தத் துறையில் பணி செய்தாலும் மற்றவர்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பார்கள். ஏழ்மையான குடும்பச் சூழலில் பிறந்திருந்தாலும் தங்களது கடின உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வந்து விடுவார்கள்.

உத்திராடம் முதல் பாதம்
உத்திராடம் முதல் பாதத்தை குரு பகவான் ஆட்சி செய்கிறார். அபாரமான நினைவாற்றலைக் கொண்டவர்கள். அன்பும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். புராண, இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவர்கள். ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே சிக்கென்று பிடித்துக் கொள்வார்கள். தான் கற்ற கல்வியின் மூலம், அனுபவ அறிவைக் கொண்டு பிறருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவர்கள். கணவன் மனைவிடையே பரஸ்பர புரிந்துணர்வும், அதிக பாசமும் மேலோங்கும். எந்த ஒரு முடிவையும் தனது துணையின் கருத்தைக் கேட்டுவிட்டுத்தான் எடுப்பார்கள்.

உத்திராடம் இரண்டாம் பாதம்
சனி பகவான் இதன் அதிபதி. பெற்றோர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கங்களில் புகழ் பெறுவார்கள். ஒருவருக்கு நன்மை ஏற்படுகிறதென்றால் பொய் சொல்வதற்கு தயங்கமாட்டார்கள். அடிக்கடி வாகனங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவார்கள். எதிரிகளை அடையாளம் கண்டு ஒதுக்குவார்கள். தேவையே இல்லாமல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற இயலாமல் வருத்தமடைவார்கள்.

உத்திராடம் மூன்றாம் பாதம்
இந்த பாதத்திற்கும் சனி பகவானே அதிபதியாகிறார். தவறோ சரியோ மனதிற்கு பட்டதை வெளிப்படையாகச் சொல்வார்கள். சுய சிந்தனையுள்ளவர்கள். பிறர் கண்டு பிடிக்க முடியாதவாறு தவறுகளை சமார்த்தியமாகச் செய்வார்கள். அடிக்கடி கோபப்பட்டு வருத்தமடைவார்கள். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். மற்றவர்கள் இவர்களிடம் சகஜமாக பழகுவதற்கு பயப்படுவார்கள். கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள்.

உத்திராடம் நான்காம் பாதம்
நான்காம் பாதத்தை குரு பகவான் ஆட்சி செய்கிறார். துணிச்சல்மிக்கவர்களாக இருப்பார்கள். அதிகமான தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள். மனோ தைரியம் உள்ளவர்கள். சோர்வை பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். குடும்பப் பற்றுள்ளவர்கள். மற்றவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவார்கள். வெளிநாடுகளில் நண்பர்களைப் பெற்று அதன் மூலம் ஆதாயமும் பெறுவார்கள்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில். தாயார் பிரம்ம வித்யாம்பிகை (மீனாட்சி). தங்களது தோஷங்கள் நீங்க உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டியும், குடும்ப ஒற்றுமைக்காகவும் அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *