
உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த மன வலிமையையும், உண்மையையே பேசும் குணத்தையும் கொண்டிருப்பார்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். கம்பீரமான நடையும், பெண்களை எளிதில் கவரும் உடலமைப்பையும் கொண்டிருப்பார்கள். எதிர்காலம் கருதி திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் சமார்த்தியமாக செய்து முடிப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாகவும், உண்மையாகவும் அணுகுவார்கள். எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றலைக் பெற்றிருப்பார்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தடம் மாறாத குணம் கொண்டவர்கள். ஆன்மீகம் மற்றும் தெய்வ காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். யாரையும் அலட்சியம் செய்யமாட்டார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும், சுயமரியாதையும், கண்ணியமும் உடையவராகவும் திகழ்வார்கள். பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்கமாட்டார்கள்.
கல்வி
சிறந்த அறிவாளியாகவும், புத்திசாலியாகவும், சுறுசுறுப்பாகவும் செயலாற்றுபவர்கள் என்பதால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஜோதிடம், கலை, இசை போன்ற துறைகளில் ஜொலிப்பார்கள்.
தொழில்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனோதிடமும், அறிவாற்றலும் பெற்றிருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ, அல்லது பெரியளவில் நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி, முதலாளி என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள். எவருடைய மனதையும் புண்படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் கில்லாடிகள். எந்தவொரு போட்டி, பொறமையையும் தவிடு பொடியாக்கக் கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.
குடும்பம்
குடும்பத்தின் மீது அளவு கடந்த அக்கறையும், பாசமும் வைத்திருப்பார்கள். முன்கோபத்தால் சிறு சிறு வாக்குவாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் கூட தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு, மனை, வண்டி, வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள்.
ஆரோக்கியம்
முதுகு வலியும், கழுத்து வலியும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு வரும் வாய்ப்புள்ளது. இரத்தக் கொதிப்பு, இரத்த நாளங்களில் அடைப்பும், மூளை நரம்புகளில் ரத்த அடைப்பும் உண்டாகும். உடல் நிலையில் சற்று பலகீனமாக இருப்பார்கள்.
உத்திரம் நட்சத்திர குணங்கள்
உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும், 2,3,4, பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்துள்ளன. முதல் பாதத்திற்கு ராசி நாதன் சூரியன். மற்ற மூன்று பாதங்களின் ராசி நாதன் புதன். சூரிய பகவானின் அம்சத்தில் வந்த இரண்டாவது நட்சத்திரம்.
பொதுவான குணங்கள்
வசீகரமான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். உடலை சிக்கென்று கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். நடையில் நளினம் மிளிரும். சிறந்த கல்விமானாக விளங்குவார்கள். சில காரியங்களை தன்னைத் தவிர யாராலும் செய்ய முடியாது எண்ணம் கொண்டவர்கள். மனோதிடம் வாய்ந்தவர்கள். உண்மையையே பேசுவார்கள்.
பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் தனது சொந்த உழைப்பினாலும், முயற்சியாலும் வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். ஆடம்பரப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். நயவஞ்சம் அறியாதவர்கள். இனிமையாக பேசி பெண்களை கவர்வார்கள். எந்தச் சூழலில் தடம் மாற மாட்டார்கள். ஏதேனும் சிறு குறைகளைக் கண்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
கலையார்வம் உள்ளவர்கள். சிறந்த சிந்தனைவாதிகளாகவும் விளங்குவார்கள். இளமையில் வறுமையில் வாடினாலும் முதுமையில் வளங்கள் வந்து சேரும். அனுபவ அறிவை அதிகம் பெற்றவர்கள். பேச்சாற்றலால் எதிரிகளை எளிதில் மடக்கிவிடுவார்கள். சிக்கனவாதிகள், சுயமரியாதை கொண்டவர்கள். தன்னலம் கருதாமல் பிறருக்காக உழைப்பார்கள். ஜோதிடத்தில் ஆர்வமும், சமயம், சாஸ்திரம், வேதங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.
உத்திரம் முதல் பாதம்
குரு பகவான் இந்த பாதத்தில் அதிபதியாகிறார். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் அறிவாற்றல் கொண்டவர்கள். திறமையான உழைப்பாளிகளாக விளங்குவார்கள். வேத சாஸ்திரங்களில் ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். சூதுவாது தெரியாது. அன்பும், பண்பும் கொண்டவர்கள். சகோதரர்களிடம் பாசம் காட்டுவார்கள்.
உத்திரம் இரண்டாம் பாதம்
இதன் அதிபதி சனி பகவான். பொருளையும், புகழையும் சேர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். தலைமைப் பண்பை நிரம்பப் பெற்றிருப்பார்கள். சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் அவசரத்தைக் காட்டுவார்கள். அதனால் ஈட்டிய பொருளை இழந்த தவிப்பார்கள்.
உத்திரம் மூன்றாம் பாதம்
இதன் அதிபதியும் சனி பகவானே. இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு என்ன குணங்கள் இருந்ததோ அது இவர்களுக்கும் இருக்கும். தான் என்ற அகம்பாவம் கொண்டவர்கள். இதனால் பலரது வெறுப்பை சம்பாதிப்பார்கள். வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்.
உத்திரம் நான்காம் பாதம்
குரு பகவான் இதன் அதிபதி. எங்கும் அடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு ஏற்றார் போல வளைந்து நெளிந்து வாழத் தெரிந்தவர்கள். சிறந்த கல்விமானாக இருப்பார்கள். கடின உழைப்பாளிகள், திறமைசாலிகள். தர்மங்கள் செய்வதில் அக்கறை காட்டுவார்கள்.
உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா, இடையாற்று மங்கலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில். தாயார் மங்களாம்பிகை. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களது தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். திருமணத்திற்கான முக்கியமான பிரார்த்தனை தலம் இது. குடும்ப ஒற்றுமைக்காகவும், உடம்பில் கால் வலி குணமாகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ இங்கு வந்து வழிபடலாம். பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் குடும்பத்துடன் மீண்டும் சேர இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.