
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகும், அறிவும் நிறைந்தவர்கள். செவ்வாய் பகவானின் நட்சத்திரன் என்பதால் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்திருப்பார்கள். எதற்கும் அஞ்சாத போர்க் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். சிறந்த பக்தியும், நற்குணங்களும், திறன்களும் அமைந்திருக்கும். தங்களது கடமைகளை மிகச்சரியாக நிறைவேற்றுவார்கள். எதிலும் நேர்மையாக பேசுவார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்றுதல் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் அர்ப்பணிப்பு எனும் குணத்தால் நினைத்த இலக்கை எளிதாக அடைந்துவிடுவார்கள். எந்த காரியமானாலும் அதை எச்சரிக்கையுடன் கையாள்வார்கள். சூழ்நிலைகளுக்கு தகுந்தாற் போல் வளைந்து நெளிந்து கொடுக்கும் குணம் படைத்தவர்கள். சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தன்னை மதியாதவர்களின் வாசற்படியை மிதிக்கமாட்டார்கள். பேச்சாற்றல்மிக்கவர்கள். அனுபவ அறிவைக் கொண்டு மற்றவர்களுக்கும் வழிகாட்டுவார்கள். எதிலும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். லட்சியவாதிகளாக இருப்பார்கள்.
கல்வி
சிறந்த ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாதாடுவதில் திறமை படைத்தவர்கள் என்பதால் அரசியலிலோ, வக்கீல் தொழிலிலோ சிறந்து விளங்குவார்கள். பல விஷயங்களையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
தொழில்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். வேலையானாலும், தொழிலானாலும் வெற்றி பெறுவார்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறும் குணம் படைத்தவர்கள். பூமியின் மீது தீராத காதல் கொண்டவர்கள் என்பதால் ராணுவம், காவல்துறை, சமூக பாதுகாப்பு போன்ற பணிகளில் பணியாற்றுவார்கள். பொறியியல் மற்றும் ஹார்டுவேர் துறையில் தொழில் லாபகரமானதாக இருக்கும்.
குடும்பம்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ விரும்புவார்கள். முன்கோபிகளாக இருந்தாலும் குற்றம் செய்பவர்களை தண்டிக்காமல் விடமாட்டார்கள். கோபமிருக்கும் இடத்தில் தான் குணம் என்பது போல் குடும்பத்திலுள்ளவர்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவார்கள். யாரையும் சார்ந்து வாழக் கூடாது என நினைப்பவர்கள். உற்றார், உறவினர்களை விட மற்றவர்களிடம் அதிக பாசம் காட்டுவார்கள். பொய் பேசுபவர்களை கண்டால் அருகிலேயே சேர்த்துவிட மாட்டார்கள்.
ஆரோக்கியம்
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கை, கால்களில் வலியும், நரம்புகளில் பிரச்னையும், இருதயம் சம்பந்தப்பட்ட, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மயக்கம், தலைசுற்றல், இருதய துடிப்பு அதிகமாதல் போன்ற பிரச்னைகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
அவிட்டம் நட்சத்திர குணங்கள்
செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மூன்றாவது நட்சத்திரம். ராசி நாதன் சனி பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் நேருக்கு நேராகப் பேசுவார்கள். மென்மையான குணம் படைத்தவர்கள். பெற்றோர்களை கடைசி காலம் வரை பேணி பாதுகாப்பார்கள். பொன், வெள்ளி ஆபரணங்கள் பிடிக்கும். பல கலைகளை கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
பொதுவான குணங்கள்
ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள். துணிச்சல்மிக்கவர்களாகவும் இருப்பார்கள். விமர்சனங்களை தாங்கிக் கொள்ளமாட்டார்கள். அழகு, அறிவு, அடக்கத்தை ஒருங்கேப் பெற்றவர்கள். எந்த நிலையிலும் கௌரவமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இவர்களுக்கு பொருந்தும். அடுத்தவர் தயவை வேண்டமாட்டார்கள்.
நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், வல்லவர்களுக்கு வல்லவர்களாகவும் விளங்குவார்கள். வீண் சண்டையை விரும்பாதவர்கள். பல போராட்டங்களைக் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
துரோகிகளை ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள். ராணுவத்திலும், காவல் துறையிலும் உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள். விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள்
கூட்டுக்குடும்பமாக வாழ ஆசைப்படுவார்கள். ஒருவர் மீது கோபம் இருந்தாலும் கூட அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்வார்கள். கடின உழைப்பினால் முன்னேறுவார்கள். உறவினர்களை விட நண்பர்களுக்கும், அந்நியர்களுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். நடைமுறைக்கு எது சரியாக வருமோ அதையே ஏற்றுக் கொள்வார்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அனுபவ அறிவைக் கொண்டு மற்றவர்களை வழிநடத்துவதில் வல்லவர்கள். இளமைக் காலத்தை விட மத்திம வயதில் நிம்மதியும், கவலையற்ற வாழ்க்கையும் இவர்களுக்கு அமையும்.
அவிட்டம் முதல் பாதம்
இதன் ராசி அதிபதி சனி பகவான். ஆடம்பர செலவுகளை விரும்பாதவர்கள். பசி தாங்க மாட்டார்கள். இரக்க குணம் கொண்டவர்கள். உடல் வலிமை கொண்டவர்கள். செல்வாக்கு நிறைந்தவர்கள். செல்வம் உடையவர்களாகவும் விளங்குவார்கள்.
அவிட்டம் இரண்டாம் பாதம்
இதன் ராசி அதிபதியும் சனி பகவான் தான். உண்மையைத் தான் பேசுவார்கள். என்றாலும் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள். எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கையுடையவர்கள். விடா முயற்சியைக் கொண்டவர்கள். தான தர்மங்களில் ஈடுபாடு உள்ளவர்கள்.
அவிட்டம் மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்வது சனி பகவான். நல்ல குணங்களை கொண்டவர்கள் இவர்கள். மனோ தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். மெல்லிய உடலமைப்பை கொண்டிருப்பவர்கள். சிவந்த நிறம் உடையவர்களாக இருப்பார்கள்.
அவிட்டம் நான்காம் பாதம்
இதன் ராசி அதிபதியும் சனி பகவான் தான். எந்த செயலையும் அலசி ஆராய்ந்து செய்வார்கள். அதிர்ஷ்டக்காரர்கள். சாத்தியமில்லாத வித்தியாசமான எண்ணங்களைக் கொண்டவர்கள். கர்வம் கொண்டவர்கள். எந்தக் காரியத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்.
அவிட்டம் ராசிக்காரர்களுக்கான கோயில்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, கீழக்கொருக்கையில் அமைந்துள்ளது அருள்மிகு பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில். தாயார் புஷ்பவல்லி. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களது தோஷங்கள் அகல இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் சிறக்க, திருமணத்தடை நீங்க, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.