அனுஷம் நட்சத்திரம் – anusham natchththiram

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்வார்கள். சிறந்த பேச்சாற்றலைப் பெற்றிருப்பார்கள். நேர்மையானவர்கள் என்பதால் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்கள். கடவுள் பக்தி கொண்டவர்கள். போராட்ட குணத்தைப் பெற்றிருப்பதால் வாழ்க்கையில் எந்த தடையையும் கண்டு அஞ்ச மாட்டார்கள். யார் குற்றம் செய்தாலும் நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே என்பார்கள். பல பேரது சுமைகளை தாங்குபவர்களாக இருந்தாலும் கூட, தன்னுடைய சுமைகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். எல்லா விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். தேடி வருகின்ற வாய்ப்புகளை சரியான பயன்படுத்திக் கொள்வார்கள். எந்த காரியத்திலும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கொண்ட கொள்கையில் மாறாதவர்கள் என்பதால், நண்பர்கள் வட்டம் சிறியதாகத்தான் இருக்கும். அனுபவ அறிவைப் பெற்றிருப்பார்கள். மிகச்சிறிய வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். பசி பொறுக்கமாட்டார்கள். ஜாதி, மதம், இனம் இவை எல்லாவற்றையும் கடந்து அனைவருடன் அன்பு பாராட்டுவார்கள்.

கல்வி

கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். கதை, காவியம், இசை, ஓவியம் போன்றவற்றில் விருப்பமுடையவர்கள். அயல்நாடு சென்று கல்வி கற்கும் யோகமும் பெற்றவர்கள். இவர்களில் பலர் நாட்டியப்பேரொளிகளாகவும், சிறந்த பாடகர்களாகவும், வசன கர்த்தாக்களாகவும் இருப்பார்கள்.

தொழில்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கக் கூடியவர்கள். மருத்துவம், வங்கி, காவல்துறை, தீயணைப்புத் துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். பலராலும் பாராட்டப்படக் கூடிய பல அரிய பெரிய காரியங்களை செய்து உயர் பதவிகளை வகிப்பார்கள். சிலர் தொழிலாளர்களுக்காக போராடுவதால் தொழிற்சங்கத் தலைவர்களாகவும் இருப்பார்கள். கலை தொடர்பான தொழில், கவுன்சிலிங், சைக்காலஜி, அறிவியல், எண் கணிதம், கணிதவியல், நிர்வாகம் தொடர்பான பணிகள், தொழிற்சாலை நடத்துதல், சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் ஈடுபடுவார்கள்.

குடும்பம்

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். மனைவிக்கு மரியாதை அளிப்பார்கள். பெற்றோரைக் காப்பாற்றுவார்கள். உடன் பிறந்தோருக்காக விட்டுக் கொடுப்பார்கள். செல்வம், செல்வாக்கு, அசையும், அசையாச் சொத்துக்கள் சிறப்பாக அமையும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வார்கள்.

ஆரோக்கியம்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இடது கண் நரம்புகள், தலை நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம். தலைவலியும், வயிற்றில் வலியும் இருக்கும்.

அனுஷ நட்சத்திர குணங்கள்
அனுஷம் நட்சத்திரம் மகாலட்சுமியின் நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 17வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. சனி பகவானின் நட்சத்திரமும் அனுஷம் தான். மகாலட்சுமி தாயார் அமர்ந்திருக்கும் தாமரை பிறந்ததும் அனுஷத்தில் தான். அவ்வளவு ஏன் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகாபெரியவா அவதரித்ததும் இந்த அனுஷம் நட்சத்திரத்தில் தான். அனுஷ நட்சத்திரத்தை போர் கிரகமான செவ்வாயும், அமைதி கிரகமான சனியும் ஆள்கின்றன. இந்த நட்சத்திரம் அமர்ந்திருக்கும் ராசி விருச்சிகம்.

பொதுவான குணங்கள்

அனுஷ நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்டகரமான கரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். இவர்கள் கையால் ஒரு ரூபாயை வாங்கி தொழில் தொடங்கினால் அது அமோகமாக நடைபெறும். லட்சுமி அம்சம் நிறைந்த நட்சத்திரம் என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். எதையும் எதிர்பார்க்காமல் எளிமையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தாயின் அன்புக்கு ஏங்குபவர்களாக இருப்பார்கள். கல்வி நிமித்தமாகவும், வேலையின் நிமித்தமாகவும், தொழிலில் நிமித்தமாகவும் அயல்நாடு, வெளியூர்களில் வாழ்பவர்களாக இருப்பார்கள். தான தர்மங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

கடவுள் பக்தியில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை எனலாம். இளகிய மனமும், தாராள குணமும் இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெற இரவு பகலாக கடுமையாக உழைப்பவர்களாக இருப்பார்கள். கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்களாக இருப்பதால் பெண்கள் இவர்களை விரும்புவார்கள். பெரியவர்களிடத்தில் விசுவாசமும் மரியாதையும் உள்ளவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் அன்பும், பாசமும் வைத்திருப்பதோடு மனைவிக்கு மரியாதை தருபவராக இருப்பார்கள். எல்லோரிடத்திலும் நட்பு பாராட்டுவார்கள்.

செல்வம், புகழ், செல்வாக்கு, பெருமை யாவும் இவர்களைத் தேடி வரும். பல விருதுகளைப் பெறுவார்கள். தொழிலாளர்களுக்காக போராடும் குணம் கொண்டவராக இருப்பார்கள். பேச்சில் வித்தகர்களாக இருப்பார்கள். தெளிவாகப் பேசுவார்கள். சிக்கனமாக இருப்பார்கள். அனேகம் பேர் மருத்துவம், வங்கி, காவல், வாகனம், தீயணைப்பு, உளவு ஆகிய துறைகளில் பணியாற்றுவார்கள்.

அனுஷம் முதல் பாதம்
இதன் அதிபதி சூரியன். கூர்மையான அறிவைப் பெற்றவர்கள். உண்மை விரும்பிகள். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். தன்னம்பிக்கை குறைவானவர்கள். என்றாலும் வைராக்கியக்காரர்கள்.

அனுஷம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை ஆட்சி செய்பவர் புதன். அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். கலையார்வம் கொண்டவர்கள். தங்களை அலங்கரித்துக் கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இசைக் கருவிகளை கையாள்வதில் வல்லமை பெற்றவர்கள். பொறுப்பும், பாசமும் நிறைந்தவர்கள்.

அனுஷம் மூன்றாம் பாதம்
இதன் அதிபதி சுக்கிரன். பாசம் நிறைந்தவர்கள். குடும்பப் பொறுப்புகளை அறிந்து நடந்து கொள்வார்கள். கடின உழைப்பாளிகள், பிறருக்கு உதவி செய்தவன் வாயிலாக மகிழ்ச்சி கொள்கிறவர்கள்.

அனுஷம் நான்காம் பாதம்
நான்காம் பாதத்தின் அதிபதி செவ்வாய். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். எதிலும் கடின முயற்சிக்கு பின்பே வெற்றி கிடைக்கும். நாணயமானவராக இருப்பார்கள்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்


நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, திருநின்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில். அனுஷ நட்சத்திரக்கார்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தலை இறைவனை வழிபடுகிறார்கள். மற்ற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு பரிகார பூஜை செய்து கொள்கின்றனர்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, அனுஷம் நட்சத்திரத்திலோ, தங்களது பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ, துவாதசி, வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களிலோ இத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு சந்தனக் காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் சிறப்பான வாழ்க்கையைப் பெறலாம் என்பது ஐதீகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *