மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் நம்மை சேரும்

பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

“மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது” என்பது பழமொழி. திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்ச காலத்தில் செய்யும் தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறார் என்பது நம்பிக்கை. புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் மகாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

பித்ரு தர்ப்பணம் கடமை

இந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும் நமது முற்பிறப்பு பாவ புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுவே. அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில் பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

மகாளய அமாவாசை

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிரார்த்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும்.

14 நாட்கள் மகாளய பட்சம்

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். வரும் 20 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 6ஆம் தேதி வரை 15 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.

முன்னோர்களின் ஆசி

மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

முன்னோர்களுக்கு திருப்தி

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர்.

முன்னோர்கள் சாபம் நீங்கும்

மகாளய பட்ச காலத்தில் புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் கூடவே தானமும் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பபணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

பித்ரு பூஜையின் மகிமை

நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம். பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்,பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.

தீராத கஷ்டங்கள் தீரும்

நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது என்பது நம்பிக்கை. பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது. மஹாளய அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பசுவிற்கு பழம்

அவரவர் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம். அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம். இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.

என்ன நாளில் என்ன பலன்

மகாளய பட்ச காலமான 14 நாட்களில் எந்தெந்த நாளில் திதி கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 • பிரதமை : செல்வம் பெருகும்
 • துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
 • திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும்.
 • சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
 • பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
 • சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
 • சப்தமி : மேல் உலகத்தினர் ஆசி
 • அஷ்டமி : நல்லறிவு வளரும்.
 • நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
 • தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்.
 • ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்.
 • துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்.
 • திரயோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்.
 • சதுர்த்தசி : முழுமையான இல்லறம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
 • அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *