மூதாதையர்கள் சாபம் போக்கும் 3 வது சனிக்கிழமை விரதம்

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.

‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம். 

புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக போற்றப்படுகிறார். ‘வேங்’ என்றால் ‘பாவம்’ ‘கடா’ என்றால் ‘தீர்த்து வைக்கும் சக்தி’ என்று பொருள். ஆதலால் திருப்பதிக்கு ‘வேங்கடாச்சலம்’ என்ற பெயர் வந்தது. 

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீவேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.

ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது. ஒருமுறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி ‘மும்மூர்த்திகளில் யார் பெரியவர்’? யாருக்கு ‘அவிர்பாகம்’ கொடுப்பீர்கள்? என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார்.

முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை.  அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச்சென்றார் பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது. 

ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார். 

பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை (திருமலை) தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாத்மியத்தில் உள்ள கதையாகும்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும். 

பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *