மஹாளய பட்சத்தில் சிறக்கும் மஹாவ்யதீபாதம் 28.09.2021 – செவ்வாய்கிழமை

புரட்டாசி மாதம் என்றாலே விரதத்திற்கு உரிய புண்ணியமாதம் என்பதை அனைவரும் அறிவோம். இம்மாதத்தில் க்ருக்ஷ்ணபக்ஷ (தேய்பிறை) பிரதமை தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்களும் ‘மஹாளய பக்ஷம்’ என வழங்கப் பெறுகின்றன. தென்புலத்தார் எனப்பெறும் பித்ருலோகத்தினைச் சார்ந்த நமது முன்னோர்கள் (வருடந்தோறும்) இந்த 15 நாட்களும் நம்மைச் சமீபித்து இருப்பதாக சாஸ்திரங்கள் பகர்கின்றன. அந்தந்த இல்லத்தார் சம்பிராதாயப்படி மறைந்த இல்லத்துப் பெரியவர்களுக்கு உரிய திதியில் மற்ற பந்துக்களுக்கும் சேர்த்து (எள் + ஜலம்) அர்க்யம் விடுவதன் மூலம் சம்பந்தமுடைய சகல பித்ருக்களும் த்ருப்தி அடைகின்றனர். இத்தகு நீர்க்கடன் ஆற்றுதல் மூலமாக அந்த ஜீவர்களுக்கு புண்ணிய பலம் அதிகரிக்கின்றது. எனவே அவர்கள் மனம் குளிர்ந்து அவரவர் இல்லத்து சந்ததிகளை ஆசிர்வதித்து விட்டுச் செல்கின்றனர். பித்ருக்கள் வழிபாட்டில் குறை ஏற்படும்போது அது தோஷமாக மாறி நம் சந்ததிகளைப் பலவிதங்களில் பாதிக்கின்றது. இத்தகு தோஷங்கள் ஏற்படாமலிருக்கவும்; ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் காசி, கயா முதலான தலங்களில் பித்ருக்களுக்கான வழிபாடு செய்வது இந்துக்களின் இன்றியமையாத கடமையாக உள்ளது. அத்தகு புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு இணையான வ்யதீபாத வழிபாட்டிற்குரிய காவிரிக்கரைத் தலமாக திருக்குளம்பியம் விளங்குகின்றது.

‘வ்யதீபாதம்’

‘வ்யதீபாதம்’ என்பது 27 விதமான யோகங்களில் ஒன்று. அத்தகைய யோக தினத்தில் வழிபடுவதற்கு உரிய சிறந்த ஷேத்திரமாக திருவாவடுதுறைக்கு (நாகை மாவட்டம்) அருகில் அமைந்துள்ள திருக்கோழம்பம் என்கிற ஸ்தலம் திகழ்கின்றது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் இந்நாளில்
திருக்குளம்பியம் என வழங்கப் பெறுகின்றது.

அம்பிகை பசுவுருவில் பால் சொறிந்து ஸ்வயம்புவான லிங்கத்திருமேனியைப் பூஜிக்கும் போது, கால் இடறியதால் பசுவின் குளம்பு பட்டு ஏற்பட்ட வடுவினை இன்றும் மூலவரின் பாணத்தில் காணலாம். அதனாலேயே இத்தலத்து மூலவர்
‘ஸ்ரீகோழம்பநாதர்’ என்ற நாமத்தை ஏற்று விளங்குகின்றார். குயில் வழிபட்டமையால்
ஸ்ரீகோகிலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.

பொதுவாகக் குறிப்பிட்ட துல்லியமான கிரகசேர்க்கைகள் ஏற்படும் நேரங்களில் செய்யப்பெறும் தேவதா வழிபாடுகள் மற்ற நேரங்களில் செய்யப்பெறுபனவற்றை விட பன்மடங்கு புண்ணியபலன்களை நமக்கு அள்ளித் தருபவைகளாக அமைந்து விடுகின்றன.

இப்படிப்பட்ட யோக காலங்களைத் தெரிவு செய்து வழிபாடுகளை நிகழ்த்துவதன் மூலம் அளவிலாத நன்மைகளை அடைய இயலும்.

பொதுவாக யோகங்களை மூன்று விதமாக நம் முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.

01.ஜெனன கால ஜாதகத்தில், க்ரஹங்களின் சேர்க்கையினால் ஏற்படும் யோகங்கள்.

  1. நக்ஷத்திர, தின சேர்க்கையின் அடிப்படையில் ஏற்படும் யோகங்கள்…!( சித்தயோகம், அமிர்த யோகம், மரண யோகம் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் படுவன. ).
  2. சூரிய சந்திரனுக்கிடையே ஏற்படும் தொடர்பால் உண்டாகும் யோகங்கள்.

இந்த மூன்றாவது வகை யோகங்கள் விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை உள்ள 27 விதமான யோகங்கள் இவற்றுள் ஒன்றுதான் ‘வ்யதீபாதம்’.
இது யோகங்களுள் தலையானது. புண்ணிய பலன்களை அள்ளித் தரக் கூடியது.
ஒரு மாதத்திற்கு 27 நக்ஷத்திரங்கள் கிரமமாக தோன்றுவது போல, 27 யோகங்களும் தோன்றுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த வ்யதீபாத யோகம். மாதத்திற்கு ஒன்று எனக் கணக்கிடப் பட்டாலும், ஏறக்குறைய 13 வ்யதீபாத யோக தினங்கள் ஒரு வருடத்தில் அமைகின்றன என்பது அறிந்தோர் கூற்று.

இந்த வ்யதீபாதமானது யோகம் என்று சொல்லப்பட்டாலும், சுப யோகத்திற்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. இதனை அசுப யோகம் என்றே சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இத்தகைய தினங்கள் சுப விசேஷங்களுக்கு உரிய தினங்கள் அன்றி, மாறாக பித்ரு காரியங்களான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்றவைகளுக்கு மிகச் சிறப்பான தினங்களாகக் கருதப் படுகின்றன.

அமாவாசை, வருடப்பிறப்பு, அயனப் பிறப்பு, மாதப் பிறப்பு, இன்னபிற…என ஒரு வருடத்திற்கு இந்துக்கள் செய்யவேண்டிய 96 தர்ப்பண தினங்களில் இந்த ‘வ்யதீபாத’ தினங்களும் அடக்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

‘வ்யதீபாதம்’ – புராண வரலாறு

ஒரு சமயம் சந்திர பகவானுக்கு குருபத்தினியான தாரையின் மீது விருப்பம் ஏற்பட்டது. இதனை அறிந்த சூரிய பகவான் கோபத்துடன் சந்திரனை நோக்க, அவரும் பதிலுக்கு சினத்துடன் பார்த்தாராம். இவ்விருவரின் சினந்த பார்வைக் கலப்பினால் தோன்றிய தேவதையின் ஸ்வரூபமே ‘வ்யதீபாத’ யோகத்திற்கு உரியதாயிற்று. எனவேதான், இது அசுப யோகம் என்று வழங்கப் படுகின்றது.
வ்யதீ பாத யோகத்திற்கு அதிதேவதை சிவபெருமான் ஆவார்.

அன்றைய தினத்தில், இத்தலத்து ஆலயத்தில் செய்யப்பெறும் வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபடுவோருக்கு பித்ரு தோஷங்கள் நீங்கப் பெற்று, சகல க்ஷேமங்களும் உண்டாகும் என்பது ஸ்தல வரலாறு சொல்லும் செய்தி ஆகும்.

வ்யதீபாத நாட்களில் கோழம்பத்து ஆலயத்தில் ஹோமங்கள் செய்து, கலச நீரினைக் கொண்டு மூலவரை அபிஷேகிக்கும் போது உண்டாகும் அதிர்வுகள் வழிபடுவாரின் மீது படும் போது, அவர்களின் பித்ரு தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது சித்தர்கள் வாக்கின் வழிவந்த தொன்மையான ஐதீகம். அன்றைய தினம் இத்தலத்து ஈசரை ‘த்ரிசேதி’ சொல்லி மலர்களால் அர்ச்சித்தல் விசேஷம் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது.

மாதந்தோறும் வ்யதிபாத தினங்களில் ஹோமம்,  பூர்ணாஹூதி நிறைவு, கடம் புறப்பாடு, மூலவருக்கு  கட தீர்த்தத்தினால் அபிஷேகம், அலங்காரம், மற்றும் மஹா தீபாராதனை ...என முறையாக வழிபாடு நிகழ்த்தப்பெறுவது இத்தலத்தில் மட்டுமே.

இவ்வழிபாட்டினைக் காண்பவர்களுக்கும் சகல தோஷங்களும் விலகி ஸ்ரீ கோழம்பநாதரின் அனுக்ரஹத்தினால் அளவற்ற மேன்மைகள் உண்டாவது இன்றளவும் கண்கூடு.
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *