நவரத்தியின் முதல் நாள்

நம்மை பெற்றவளை நாம் அம்மா என அழைக்கிறோம். அப்பாவின் பார்வையில் அம்மாவானவள் மனைவி. தாத்தா பாட்டிக்கு அவளே மகள். சித்தி மாமாவிற்கு சகோதரி. இன்னும் மருமகளாக, அண்ணியாக எத்தனையோ உறவுகளின் பெயரால் அம்மா அழைக்கப்படுகிறாள். உறவுமுறை வெவ்வேறாக இருந்தாலும் நபர் ஒன்றுதான்.

கடவுள்கள் விஷயத்திலும் இந்த ஃபார்முலாவே பயன்படுத்தப் படுகிறது. தீமையை அழித்து நன்மையை கொடுக்கும் வகையில் சக்தி பல்வேறு ரூபங்களை எடுக்கிறாள்.

மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே.

இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.
‘சரத் காலத்தில் செய்யும் பெறும் வழிபாடான நவராத்திரியில் என்னை துதித்து, என் மகாத்மியத்தை கேட்போரும் படிப்போரும் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள்’ என தேவி மஹாத்மியத்தில் நவராத்திரியின் சிறப்பு பற்றி அம்பிகையே கூறியிருக்கிறாள்.

ஒவ்வொரு வருடமும் மொத்தமாக நான்கு நவராத்திரிகள் வருகின்றன. பங்குனியில் லலிதா நவராத்திரி, மாசியில் ராஜமாதங்கி நவராத்திரி, ஆடியில் மகா வராஹி நவராத்திரி, புரட்டாசியில் பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி.

இதில், இறுதியாய் கூறிய சாரதா நவராத்திரியே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.

முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி கொடுக்கிறாள். இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து தோடி ராகப்பாடல்களை பாடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *