திருப்பாவை பாடல் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

விளக்கம்: பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. கேசவன் என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *