ஆண்டாள் அருளிய திருப்பாவை

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கண்ணபிரான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்லி மங்கள வினைகளை எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர்.

“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று திருவரங்கத் துறை திருவரங்க நாதரையே தம் மனதில் நாயகராக வரித்து வாழ்ந்தவர் கோதை நாச்சியார். பெரியாழ்வார் பூ மாலை சூட, கோதை நாச்சியார் திருமாலுக்கு பாமாலை சூட்டினார். அவர் பாடிய பாடல்கள் இலக்கிய உலகின் இணையற்ற பாடல்கள் எனலாம்.

ஊர் பெண்கள் வைகறையில் தூக்கத்திலிருந்து எழுந்து தம்மொத்த சிறுமியர்களை வீடு வீடாக சென்று அனைத்து, தம்மோடு கூட்டிக்கொண்டு நீர் நிலைக்கு சென்று நீராடிப் பாவை நோன்பு நோற்பது தொன்று தொட்டுத் தொடர்ந்து இருந்து வரும் வழக்கமாகும். சங்க இலக்கியங்களில் ‘ தைந்நீராடல்’ என்று இது குறிப்பிடப்படுகிறது. நல்ல கணவனை அடைய வேண்டும் என்ற நோக்கில் பாவை நோன்பு மேற்கொள்ளப்பட்டது. ‘பார்க்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி’, நெய்யுண்ணாமல் பாலுண்ணாமல் வைகரையில் நீராடி கண்ணுக்கு மை எழுதாமல், கூந்தலுக்கு மலரிட்டு முடியாமல், செய்யத் தகாத செயல்களை செய்யாமல், பிறரை கோள் சொல்லாமல், வாழ்வது மார்கழி நோன்பின்பால் அடங்கும்.

திருப்பாவை 30 பாடல்களையும், பாடினால் பாதகங்கள் தீரும்: பரமனடி கூட்டும்; வேதத்தின் வித்தாக விளங்கும் கோதை தமிழான முப்பது பாடல்களையும் அறியாத மானுடரை இந்த உலகம் சுமப்பது தகாது என்று ஆன்றார் அருளிச் செய்தனர். எனவே தமிழராக பிறந்த ஒவ்வொருவரும் இலக்கிய உலகில் இமயமாக விளங்கும் திருப்பாவை பாடல்களை கற்று தேர்ந்து, பாடி மகிழ்ந்து பரவசப்பட வேண்டும். இதன்வழி மார்கழி மாதம் பீடை மாதமாக இல்லாமல், பீடு மாதமாக- பெருமை சேர்க்கின்ற மாதமாக அமைய வேண்டும்.

திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *