ரிஷப ராசியினரின் பொது மற்றும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

உங்கள் வாழ்க்கை என்பது உங்கள் அறிவாற்றலை கொண்டதாகவே இருக்கும். ஒவ்வொன்றையும் நீங்களே தெரிந்து கொண்டு உங்கள் செயல் திறனால் அதில் வெற்றி பெற்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் அடைந்து விடுவீர்கள். எந்த விஷயத்திலும், எப்போதும் அவசரம் காட்டவும் மாட்டீர்கள். எதற்காகவும் ஆத்திரப்படவும் மாட்டீர்கள். எந்த ஒரு செயலில் ஈடுபடுவது என்றாலும் ஒரு முறைக்கு பலமுறை நன்றாக யோசித்து அதன் பிறகு செயலிலீ இறங்குவீர்கள்.

உங்களுக்கு இயல்பாகவே மன ஆற்றலும், மன உறுதியும், நெஞ்ச அழுத்தமும் இருக்கும். கஷ்டத்தையும் பொருட்படுத்த மாட்டீர்கள். சுகத்தையும் பெரிதுபடுத்திக் கொள்ள மாட்டீர்கள். இரண்டையும் சமமாகவே கருதும் மனநிலை பெற்றவர் நீங்கள்.

எந்த சுகமாக இருந்தாலும் அதை சுவைப்பதில் ஒரு நிறைவு பெற்றால் மட்டுமே உங்கள் மனம் திருப்தி அடையும். அழகானவற்றின் மீது உங்கள் மனம் மையல்கொள்ளும், அதை அடைந்தாலும் அத்துடன் உங்கள் மனம் நின்று விடாது. வேறு ஒன்று உங்கள் கண்களுக்கு அழகாக தெரிந்தால் அதன் பின்னால் உங்கள் மனம் செல்ல ஆரம்பிக்கும், கடைசியில் கண்டதிலும் கால் வைத்து விட்டு அனுபவிக்கும் வேதனையை நீங்கள் அடைய வேண்டி இருக்கும் என்பதால், எந்த ஒன்றையும் அடைய நினைக்கும் போதே ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது.

பொருள் சேர்ப்பதில் எப்போதுமே உங்களுக்கு ஆர்வமும் ஆசையும் இருக்கும். பொருளாதாரம், வாழ்க்கையில் எதிர்காலத் தேவை என்று உங்கள் மனம் சுழலும், நீங்கள் இயற்கையிலேயே பயமற்றவர் என்றாலும் உங்களில் சிலருக்கு அளவிற்கு மீறிய சுயநலத்தாலோ, எதிர்காலத்தை பற்றிய பிரமைகளாலோ உள்ளூர ஒரு வித பயமும் பலகீனமும் தோன்றும்.
உங்கள் உணர்ச்சி வேகங்கள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமே ஒழிய அவை உங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே ஒவ்வொரு செயலிலும் ஆசையிலும் நீங்கள் உஷாராக யோசித்து செயல்பட்டால் மட்டுமே உங்களால் வெற்றியாளராக உலா வர முடியும்.

பொதுவாகவே எதிர்பாளர் மனதில் சுலபமாக இடம் பிடிக்கக் கூடிய நீங்கள். பல சமயங்களில் உங்களை விரும்பியவரே வெறுக்கும் நிலைக்கு ஆளாகி விடுவீர்கள், காரணம் காதல் விஷயத்திலும் கணக்கு பார்க்கும் உங்கள் வியாபார மூளை தான் அற்பத்தனமான விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறை காதலில் உங்களை பகைமை கொள்ள வைத்து விடும்.
நீங்கள் எந்த ஒன்றையும் நினைத்த மாத்திரத்தில் எட்டி விட மாட்டீர்கள். படிப்படியாக தான் உங்கள் முன்னேற்றம் அமையும், பெரும்பாலும் உங்கள் வாய் சாதுரியமே உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும், அதுவே உங்கள் வளர்ச்சிக்கும் வழியாக இருக்கும்.

உங்கள் திட்டங்களை சீர்படுத்தி அதற்கு ஏற்ப செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் போட்டியிடுபவர்களை எப்படியாவது வீழ்த்தி விடுவீர்கள். உங்களுக்கு பிடிக்காத வரை அவர் வழியிலேயே சென்று வீழ்த்துவதில் நீங்கள் கில்லாடியாக இருப்பீர்கள்.

நகை வியாபாரம், பருப்பு வகைகள், தேன், கடலை, சீரகம், புஷ்பராகம், புத்தகம் வியாபாரத்தில் உங்களுக்கு அதிக அளவில் ஆதாயம் கிடைக்கும். வட்டிக்கடைகள், ஷேர் வியாபாரத்திலும் நீங்கள் ஆதாயம் காண்பீர்கள். உங்களில் பலர் ஆசிரியராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், பதிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், கம்பெனி நிர்வாகத்தில் மூளையாகவோ இருப்பீர்கள். பொதுநலத்தை விட சுயநலமே உங்கள் நோக்கமாக இருக்கும். இவையெல்லாம் ரிஷப ராசியில் பிறந்தவர்களின் பொது பலன்கள் ஆகும்.

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கிரகங்கள் மாறும், தசா புக்தி மாறும். அதனால் பலன்களும் மாறும் என்றாலும் சனி பகவானின் இடப்பெயர்ச்சி நிகழும் போதெல்லாம் அவரால் நமக்கு உண்டாகிடக் கூடிய நமக்குரிய பொது பலன்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம்.

ரிஷபத்தில் பத்தில் சனி

இதுவரையில் உங்கள் ரிஷபம் ராசிக்கு பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உங்கள் முயற்சிகளில் தோல்வியும் நிம்மதியின்மையையும், பகைவர்களின் தொல்லையையும், அவர்களுக்கு அடங்கி போகும் நிலையையும் உறவினர்கள் நண்பர்களிடம் மன கசப்பையும் வழங்கி வந்தார்கள். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்கு கேட்டினையும், ஒரு சிலருக்கு தோஷத்தையும் உண்டாக்கினார்.

உங்கள் ஆரோக்கியத்திலும் நிறைவே பிரச்சினைகளை வழங்கி வந்தார் அலைச்சல், திரிச்சல், நிம்மதியின்மை, தொழில் தடை என்று இக்காலம் சோதனையும் வேதனையும் நிறைந்தே காணப்பட்டது. இவற்றையெல்லாம் மீறி உங்களுக்கு சில நன்மைகள் நடந்திருக்கும் என்றால் அது உங்கள் பொறுப்புண்ணியத்தால் நடந்தது என்றே சொல்ல வேண்டும். இல்லையெனில் உங்கள் திசா புத்தி நன்றாக இருந்திருக்க வேண்டும்.

சனிபகவான் உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவர். உங்களுக்கு பாக்யாதிபதி என்றாலும், உங்களுக்கு தொழில் ஸ்தானாதிபதியும் அவரே ஆகிறார். அவர் உங்களுக்கு வழங்கும் பலன்கள் எல்லாம் உங்களின் பூர்வ புண்ணியத்திற்கேற்றதாகவே இருக்கும்.

வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளில் 12 ராசிகளும் சஞ்சரித்து வரும் சனி பகவான் அக்காலங்களில் அவர் அமர்ந்திருக்கும் வீடு களுக்குரிய பலன்களை உங்களுக்கு முழுமையாக வழங்குவார். அவர் பார்க்கும் இடங்களுக்கு உரிய பலன்களை அசுப பலன் களாகவே வழங்குவார்.

பத்தாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் போது ஜாதகரின் ஆரோக்கியம் கெடும். மார்பு வலி ஏற்படும், மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழப்பம் காணும், தொழிலில் நஷ்டம். உத்தியோகத்தில் கஷ்டம், படிப்பில் சிரமம், குடும்பத்தில் சங்கடம் என்று அவதிப்படுத்தும். மதிப்பிற்கும் மரியாதைக்கும் கேடு உண்டாகும். பணம் செய்ய வழிகளில் செலவாகும்.

இதுவும் பொதுவான விதி தான். ஆனால் யாருடைய சாரத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அதற்கேற்ப மேலே கூறிய பலனும் மாறுபடும். அதேபோல் ஜனன ஜாதகத்தில் சனிபகவான் எந்த நிலையில் இருந்தார் என்பதையும் பார்க்க வேண்டும்.

சனிபகவான் அமர்ந்த இடம் சிறப்பாகும். அவர் பார்க்கும் இடங்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பத்தாம் இடம் முன்னேற்றத்தை வழங்கிட கூடியது. உடல் உபாதைகளை உண்டாக்கிட கூடியது. தொழில், கௌரவம், செல்வாக்கு, ஜீவனம் போன்றவற்றுக்கு காரணமானது. உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரித்து அந்த ஸ்தானத்தை வலுவாக்க போகும் சனி பகவான் அங்கிருந்து உங்கள் ராசிக்கு சுகஸ்தானம், களத்திர ஸ்தானம், விரய ஸ்தானங்களை பார்வையிட போகிறார்.

சுகஸ்தானத்தை பார்வையிடும் சனி பகவானால் இடையூறுகள், அலைக்கழிப்புகள், குடும்பத்தில் வீண் விரோதம், தாயின் உடல் நலன் பாதிப்பு, தாய் வழி உறவுகளிடம் விரோதம், பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் ஏற்பட்டு கைக்கு வராத நிலை, வாகனத்தால் சங்கடம் வீடு வகையில் பிரச்சனை கல்வியில் தடை, பெற்றார் உறவினர்களின் பகை, வீண் அலைச்சலால் டென்ஷன், சுகத்திற்கு பாதிப்பு, நோய்களால் சோதனை என்ற நிலையம்.

களஸ்திர ஸ்தானம் எனும் நிலாமிடத்தின் மீது சனி பகவானின் பார்வை பதிவதால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அதனால் ஒரு சிலருக்கு பிரிவு கூட ஏற்படும். ஒரு சிலர் குடும்பத்தை விட்டு விலக வேண்டி வரும். வருமானக் குறைவும், அதனால் பணக்கஷ்டமும் கடன் தொல்லையும் ஏற்படும்.

விரைய ஸ்தானம் எனும், பன்னிரெண்டாம் இடத்தின் மீது சனிபகவானின் பார்வை பதிவதால் வீண் அலைச்சல், காரியம் கைகூடாமை மன உளைச்சல், பொருள் இழப்பு, எதிரிகளால் இடையூறு தொழிலில் நட்டம், உத்தியோகத்தில் சங்கடம் வேலையை இழக்க வேண்டிய சூழலும் உண்டாகலாம்.

சனிபகவானின் நிலையில் அவர் சஞ்சரிக்கும் நட்சத்திரத்திற்கேற்பவும், வக்ரகதியை அடையும் நேரத்திலும், பின்னோக்கி செல்லும் காலங்களிலும் இப்ப பலன்களை பெரும்பளவில் மாறுபடும்.

சனிபகவான் நேருகேதியில் சஞ்சரிக்கும் போது தான் நாம் மேற்கூறிய பலன்கள் நடைபெறும் அதுவும் பூர்வ புண்ணியத்திற்கேற்ப மாறுபடும்.

பரிகாரம்

ஒருமுறை திருநள்ளாறு சென்று நல தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் உங்கள் அருகில் உள்ள சிவாலயத்தில் உள்ள சனீஸ்வர பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் அன்னதானம் வஸ்திரதானம் செய்யுங்கள் சங்கடங்கள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *