மிதுனம் ராசியினரின் பொது மற்றும் சனி பெயர்ச்சி பலன்கள்

புத்தி சாதுரியமும், திறமையும், சாதுரியமாக செயல்படும் ஆற்றலும் எதையும் சாதித்துக் கொள்ளும் சக்தியும் படைத்த மிதுன ராசி நண்பர்களே.

நீங்கள் பிறரை உற்சாகப்படுத்தி அவர்கள் வெற்றி அடைவதற்கு வழி காட்டுவதில் வல்லவராக இருப்பீர்கள். உங்கள் சிந்தனையும் மேலோங்கியதாக இருக்கும், உங்கள் செயல்களும் வெற்றிக்கு உரியதாகவே இருக்கும். யான்பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்று எண்ணக்கூடியவர்களாக பொது நலனில் நாட்டம் உடையவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.

எதிலும் நிரந்தரமான ஈடுபாடு என்பது உங்களிடம் இருக்காது. உங்களைப் பற்றி மற்றவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது, உங்களுக்கு ஒரு விஷயத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அதில் முழுமையாக இறங்கி வெற்றியை அடைந்து விடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் பரிபூரணமான சிந்தனையும் உங்களை வெற்றியாளராக்கி விடும்.

உயர்வை எல்லோரும் அடையவும், தாழ்ந்து கெட்டவரை உயர்த்தவும் உங்களால் மட்டுமே முடியும், எழுத்து பேச்சு, சிந்தனை எல்லாவற்றிலும் சிறந்த விளங்கும் நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுதலும் சிறந்து விளங்குவீர்கள். இலக்கியத் துறையிலும் நீங்கள் சிறப்பான இடத்தை வகித்தீர்கள். மகிழ்ச்சியான செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்கும். என்றாலும் சந்தேகப்படுவதும், சஞ்சலப்படுவதும் உங்களின் பலகீனம் என்றே சொல்ல வேண்டும்.

உங்களுக்கு ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும், வேண்டாத விஷயங்களையும் மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கும் என்பதால் உங்கள் செயல்களை அது முடக்குவதாக இருக்கும்.

உங்களிடம் பழகுபவர்களை எடை போடுவதில் நீங்கள் கெட்டிக்காரராக இருப்பீர்கள். எதையும் யூகித்துக் கொள்வதில் நீங்கள் திறமைசாலியாக இருப்பீர்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தாமலேயே மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை கிரகிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள்.

எல்லாவற்றிலும் ஈடுபாடு காட்டுவீர்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள், சமத்துவம், சகோதரத்துவம், என்பதே உங்கள் கொள்கையாக இருக்கும். மற்றவரின் குற்றம் குறைகளையும், பலகீனத்தையும் தெரிந்து கொள்ளும் நீங்கள் மற்றவர் செய்யும் சிறு தவறையும் பெரிய குற்றமாகவே நினைப்பீர்கள்.

துயரம் ,துக்கம் என்பதெல்லாம் உங்களால் தாங்க முடியாத ஒன்று. அதேபோல் கடினமான உழைப்பிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் செயல்களை சுலபமாக்கி சாதகமாக்கி கொள்வீர்கள். உங்களுக்கு ஒரு நிலையான இடத்தில் அமர்ந்து கடினமான வேலைகளை உடல் உழைப்பின் மூலமாக செய்தால் பிடிக்காது என்றாலும் மூளை சம்பந்தப்பட்ட அறிவு நுட்பமான வேலைகளை இருந்த இடத்திலிருந்து திறமையுடன் செய்து முடிப்பீர்கள். வாக்கு சாதுரியம், மூளை உழைப்பு இவை இரண்டையும் நம்பியே நீங்கள் தொழிலை செய்வீர்கள். உளவுத்துறையில் பணியாற்ற மிகவும் பொருத்தமானவராக இருப்பீர்கள், வேவுப்பார்த்தல், பிறரையும் குற்றங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்துதல், சட்டம் ஒழுக்கங்கள் தெரிந்தவராக இருத்தல் என உங்கள் பணி சிறப்படையும், உங்கள் செயலில் மற்றவர் தலையிடுவதை நீங்கள் எப்போதும் விரும்ப மாட்டீர்கள், அப்படி ஒரு தலையீடு நடந்தால் அந்த செயலை அதற்கு மேல் தொடர மாட்டீர்கள்.

பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் உங்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால் நேரம் கிடைக்கும் போது ஓய்வெடுத்துக் கொள்வது உங்கள் உடல் நலனுக்கு நல்லது. உலகத்தில் உள்ள எல்லோரும் உங்களுக்குத் தெரியும் என்று நினைப்பு உங்கள் மனதில் இருக்கும் என்றாலும் எதையும் முழுமையாக நீங்கள் தெரிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களுக்கு தேவையானவற்றை மிகத் தெளிவாக உணர்ந்து இருப்பீர்கள். ஆலோசனைகள் சொல்வதில் கெட்டிக்காரரான நீங்கள் தைரியத்தில் குறைவானவர் என்று சொல்ல வேண்டும். ஒரு சில கெட்ட பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகவும் வாய்ப்புண்டு. உங்களில் பலர் கடன் வாங்குவதற்கு அஞ்சுவீர்கள் அப்படியே வாங்கினாலும் அதை கொடுத்து விட முயல்வீர்கள், உங்களுக்கு சுய சிந்தனை தான் மூலாதனம் என்பதால் அதைக் கொண்டு சொந்த வியாபாரம் செய்தால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் எண்ணம் உலகிற்கும், மக்கள் வாழ்வதற்கும் ஏற்றவாறு இருக்கும். உங்கள் திறமை உங்களை மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வைக்கும், உங்கள் திறமையால் நீங்கள் நினைத்ததை சாதிப்பவர்களாக இருப்பீர்கள், உங்கள் மனமும் உங்கள் கனவும் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்தும், பழமைகளை நீங்கள் வெறுப்பவராக இருந்தாலும், பழமையை புதிய காலத்திற்கு ஏற்ப மாற்றக்கூடிய மெருகேற்றக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய முயற்சிகள் எடுத்த எடுப்பிலேயே வெற்றி அடையாது என்பதால் மனம் தளர வேண்டாம். தொடர் முயற்சியால் நீங்கள் நினைத்த அளவுக்கு வெற்றியை எட்டுவீர்கள். உங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் உங்கள் வாழ்வில் நிறைவேறும்.

யாரை எதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிவு பெற்ற நீங்கள் மற்றவரை பயன்படுத்தி வெற்றிகளை அள்ளிக் குவிப்பீர்கள். நீங்கள் மனம் தளரும் நேரங்களில் உங்களுடன் தொழில்துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு கிடைக்க பெறும். அதனால் வெற்றியும், ஆதாயமும் உண்டாகும்.

மிதுனத்திற்கு பாக்கிய சனி

இதுவரையில் உங்கள் மிதுன ராசிக்கு ஆயில் ஸ்தானம் எனும் எட்டாம் வீட்டில் இருந்த சனி பகவான், பல்வேறு இடர்பாடுகளை உங்களுக்கு உண்டாக்கி வந்தார். ஒரு சிலர் மரணத்தின் எல்லையை கூட தொட்டு விட்டு வந்திருக்கலாம். குடும்பத்தில் கஷ்டம், தொழிலில் போட்டி, தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு, உறவினர்களிடம் மனக்கசப்பு, முயற்சிகளில் தடை, உடல் நிலையில் பாதிப்பு, ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, சிறு சிறு விபத்துக்கள் என்ற நிலையை ஏற்படுத்தி வந்தார்.

கடந்த இரண்டரை வருடத்தில் உங்களுக்கு நன்மைகளை விட தீமைகளை அதிகமாக ஏற்பட்டது. எல்லாவற்றையும் உங்களின் பூர்வ புண்ணிய பலத்தால் சமாளித்து வந்தீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

உங்கள் ராசிக்கு 9 ஆம் வீடான பாக்கியஸ்தானத்தில் கும்ப ராசிக்குள் பிரவேசம் செய்கிறார் சனி பகவான்.

உங்கள் ராசியான மிதுனத்திற்கு சனிபகவானுக்கு பாக்யாதிபதியும் அஷ்டமாதிபதியும் ஆவார். கும்பத்தில் சனி பகவான் அமர்ந்தாலும் உங்கள் பூர்வ புண்ணிய பழங்களுகேற்பவே நன்மைகளையும் தீமைகளையும் வழங்குவார்.

சனிபகவான் அசுபர் என்றாலும் நியாயவாதி, ஒரு நீதிபதியைப் போன்றவர் , யாராக இருந்தாலும் அவருடைய பணியில் நியாயம் தவறமாட்டார். உலகையே காக்கும் சிவனை கூட சனீஸ்வர பகவான் விட்டு வைக்கவில்லை.

சனிபகவான் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், தொழிலில் இருந்த தடைகள் அகலும், முயற்சிகளில் உண்டான தோல்விகள் அகலும், வருமானம் தடைப்பட்டு இருந்த நிலை மாறும், பகைவர்களின் தொல்லைகள் அகலும், அவர்களை வெற்றி கொள்ளும் நிலை உண்டாகும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் உண்டாகிய இருந்த மனக்கசப்பு அகலும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும், ஒரு சிலர் தந்தையின் தொழிலை மேற்கொண்டு ஆதாயம் அடைவார்.

உங்களுக்கு அஷ்டமாதிபதியும், பாக்யாதிபதியும், லாபாதி பதியுமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து, உங்கள் சகோதர ஸ்தானத்தையும் சத்ரு ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

சனி மூன்றாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிவதால், உங்கள் தொழில் விருத்தி ஆகும் வருமானம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பு மற்றவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். தொழிலில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழ்ந்தாலும் அவற்றின் மூலம் நன்மையே உண்டாகும். பணவரவு பல வழிகளிலும் வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் சகோதர கீர்த்தி ஸ்தானத்தில் பதிவதால் உங்கள் ஆரோக்கியம் சீரடையும், தொழில் விருத்தி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வசதியும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். விரோதிகளை வென்று அடக்க முடியும் எதிர்பாராத பண வரவும் இருக்கும். பல்வேறு நன்மைகள் உண்டாகும். சகோதர சகோதரி வகையில் திருப்தி இல்லாமலும் பகையும் ஏற்படும்.

சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் சத்ரு ஸ்தானத்தில் பதிவதால், மனதில் துணிச்சல் அதிகரிக்கும், வாழ்க்கையில் புத்துணர்ச்சி உண்டாகும், தொழிலில் விருத்தி இருக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் செய்யும் ஆற்றல், உடல் நலன் சீராகுதல், எதிர்பாராத பண வரவும் குடும்பத்தில் நிம்மதியும் உண்டாகும்.

இவையெல்லாம் ஒன்பதாம் வீட்டில் பிரவேசிப்பதால் சனிபகவான் நிகழ்த்தக்கூடிய பொதுப்பலன் ஆகும். சனிபகவான் ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார் என்றாலும் அவர் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளும் ஒரே இடத்தில் ஒரே நிலையில் இருப்பதில்லை. இருக்கும் இடத்தில் வக்கிரகதி அடைவதுமாய் பின்னோக்கி செல்வதுமாய் இருப்பார். அதனால் பலன்களும் மாறுபடும்.

பரிகாரம்

திருவாரூர் அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனியாக காட்சி தரும் திருக்கோயில் காடரை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட்டு வாருங்கள். காக்கைகளுக்கு எள் கலந்த தயிர் சாதம் வழங்குங்கள், முதியவர்களுக்கு உணவோ, உடையோ தானம் அளித்து அவர்களுடைய வாழ்த்துக்களை பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *